ஜீரோ பேலன்ஸ் :கழுத்தை சுற்றி இறுக்கும் சுலப கடன்கள்
ஜீரோ பேலன்ஸ் :கழுத்தை சுற்றி இறுக்கும் சுலப கடன்கள்
UPDATED : நவ 02, 2025 10:45 PM
ADDED : நவ 02, 2025 10:43 PM

அந்த காலத்தில் நமது பெற்றோரும், தாத்தா பாட்டிகளும், தேவைப்பட்டபோது தான் கடன் வாங்கினர். அதுவும், வீடு கட்டவோ, திருமண செலவுகளுக்கோ தான் கடன் வாங்கினர். முதலில் சேமிப்பு, பின்னர் தான் செலவு என்பது அவர்களுடைய பாலிசி.
இன்று காலம் மாறிவிட்டது. கடன் வாங்குவது மிகவும் சுலபமாகிவிட்டது. உங்கள் போனில் ஒருசில முறை 'கிளிக்' செய்தாலோ, அல்லது கிரெடிட் கார்ட்டை தேய்த்தாலோ, யார் வேண்டுமானாலும் கடன் வாங்கிவிடலாம்.
பார்க்கவும், பயன்படுத்தவும் சுலபமாகத் தான் தெரிகிறது. ஆனால், இது தான் ஒருவரைப் படுகுழியில் தள்ளிவிடுகிறது. அதுவும், பழைய கடன்களை அடைக்க, புதிய கடன்களை வாங்கிக்கொண்டே போகும் போது, அது அதலபாதாளப் படுகுழியாகி விடுகிறது.
திரும்பிய திசையெல்லாம் கடன்
இன்று, வங்கிகளும், மொபைல் செயலிகளும் பின்டெக் நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு கடன் தருகின்றன.
எல்லா இடங்களிலும், “உடனடி அப்ரூவல்,” “இப்போது வாங்கி, பின்னால் செலுத்து,” “நோ காஸ்ட் இ.எம்.ஐ.” என்று விளம்பரங்கள் தான்.
ஆனால், இவை அனைத்திலும் மறைமுகக் கட்டணம் இருக்கிறது. அதாவது, இந்தச் சிறுகடன் செயலிகள், ஓராண்டுக்கு 36 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன. அதாவது, மாதத்துக்கு 3 சதவீத வட்டி.
ஒரு தவணையை செலுத்தவில்லை என்றாலும், உங்கள் கடன் ஊதிப் பெருத்துவிடும்.
தனிநபர் கடன் நிலை உயர்வதற்கு, கிரெடிட் கார்டு இன்னொரு முக்கியமான காரணமாக விளங்குகிறது.
இந்தியாவில் இப்போது 10 கோடி கிரெடிட் கார்டுகள் உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட 3.1 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படாமல் இருக்கிறது. இவை பெரும்பாலும் பெருநகரங்களில் இருந்தே உருவானது.
சுலபமாக கடன் கிடைப்பதால், அது ஏதோ இலவச பணம் என்று மக்கள் நினைத்துக்கொள்கின்றனர். அதனால், தேவையேற்ற பல பொருட்களையோ, அல்லது பிறகு வாங்கிக்கொள்ளக் கூடிய பல பொருட்களையோ, இப்போதே வாங்கிக் குவிக்கின்றனர்.
எதற்கெல்லாம் கடன் வாங்குகின்றனர்?
சுற்றுலா செல்லவும், மருத்துவ செலவுகளுக்காகவும், வீட்டைப் புதுப்பிக்கவும், 26 சதவீதம் பேர் பர்சனல் லோன் வாங்குகின்றனர்.
ஐபோன்களில் 25 சதவீதம், இ.எம்.ஐ.,யிலேயே வாங்கப்படுகின்றன.
ஐந்து ஜோடிகளில் ஒரு ஜோடி, தங்கள் திருமணத்துக்கு கடன் வாங்கித் தான் செலவழிக்கின்றனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குடும்பங்களின் கடன் 26 சதவீதம் தான் இருந்தது. அது தற்போது கிடுகிடுவென உயர்ந்து, 42 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது.
இதில், பதிவுசெய்யப்படாத பின்டெக் நிறுவனங்கள் வழங்கும் சிறுகடன்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. இவை 5,000 முதல் 10,000 வரை கடன் தருகின்றன. முறையாக பணம் திருப்பிச் செலுத்தப்படவில்லை என்றால், இவை 40 சதவீதம் வரை வட்டி வசூல் செய்கின்றன.
அபாயம்
கடன் தருவதில் வங்கிகளும், இதர நிதி நிறுவனங்களும் உஷாராக இருக்க வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி ஏற்கனவே எச்சரித்திருக்கிறது. ஆனால், உண்மையான கட்டுப்பாடு, கடன் வாங்கும் வாடிக்கையாளரிடம் தான் இருக்கிறது.
இப்படி சுலபமாக கடன் கிடைக்கும் வசதி தொடருமேயானால், அது வருங்காலத்தில் ஒரு தேசிய பிரச்னையாகவே மாறிவிடும். அமெரிக்காவில், குடும்பங்களின் கடன் என்பது, அவர்களுடைய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 69 சதவீதம். இந்தியாவில் ஏற்கனவே 42 சதவீதத்தை எட்டியாயிற்று. 50 சதவீதம் என்பது அபாய எல்லை.
மக்களால் கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை எனில், வங்கிகள் வாடிக்கையாளர் மீது நம்பிக்கை இழந்துவிடும். கடன் கொடுப்பதைக் குறைத்துக்கொள்ளும். அது உண்மையிலேயே கடன் தேவைப்படும் தனிநபர்கள், நிறுவனங்களுக்குப் பேரிடியாக மாறிவிடும்.
பாதுகாப்பாக, கடன் இல் லாமல் இருப்பது எப்படி?
1 அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் கடன் வாங்குங்கள், ஆடம்பரத்துக்காக வாங்க வேண்டாம்.
2 அவசரத் தேவை என்றால் மட்டும் புதிய கடன்களை வாங்குங்கள்.
3 அலைபேசிகள், இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள், சுற்றுலா போன்றவற்றை இ.எம்.ஐ.,யில் வாங்காதீர்கள்.
4 அதிக வட்டி வசூலிக்கும் கடன்களை முதலில் அடையுங்கள். குறிப்பாக, கிரெடிட் கார்டு, லோன் செயலிகள் வாயிலாக வாங்கிய கடன்கள்.
5 ஒவ்வொரு மாதமும் என்ன செலவு செய்கிறீர்கள் என்பதைக் கண்காணியுங்கள். தேவையற்ற செலவுகளை நிறுத்திவிடுங்கள்.
6 ஆறு மாதச் செலவுகளுக்குத் தேவைப்படும் தொகையை அபாய கால நிதியாக உருவாக்கி வைத்துக்கொள்ளுங்கள்.
7 கடன் வாங்குவதற்கு முன்பு வீட்டில் உள்ள பெரியவர்களிடம் ஆலோசனை கேளுங்கள். எந்த கடன் செயலியை விடவும், அவர்களுடைய அனுபவம் பன்மடங்கு உசத்தியானது.
மனதில் வைத்துக்கொள்ளுங்கள்
“தேவையற்ற பொருட்களை நீங்கள் வாங்கிக்கொண்டே இருந்தால், விரைவில் தேவையான பொருட்களையும் விற்பனை செய்ய வேண்டிய நிலை வரும்.” - வாரன் பப்பெட்
சிக்கனமாக வாழ்வது ஒன்றும் பழைமைவாதம் அல்ல. அது தான் புத்திசாலித்தனம்.
வரவுக்குள் செலவு செய்யும் குடும்பமே நிம்மதியாக வாழும்.
வீட்டுக் கடன் இல்லையெனில், நாடு மேலும் வலிமை பெறும்.
'கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற கம்பனின் வரிகளை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். அந்த சக்ரவர்த்திக்கே அந்த நிலை ஏற்படக்கூடும் எனில் நாம் எம்மாத்திரம்.
சி.கே.சிவராம்
நிறுவனர்,
ஐகுளோபல் ஆல்டர்நேட்

