/
செய்திகள்
/
வர்த்தகம்
/
சேமிப்பு திட்டம்
/
வரி சேமிப்பிற்கு மட்டும் முதலீடு செய்வதால் ஏற்படும் சிக்கல்கள்
/
வரி சேமிப்பிற்கு மட்டும் முதலீடு செய்வதால் ஏற்படும் சிக்கல்கள்
வரி சேமிப்பிற்கு மட்டும் முதலீடு செய்வதால் ஏற்படும் சிக்கல்கள்
வரி சேமிப்பிற்கு மட்டும் முதலீடு செய்வதால் ஏற்படும் சிக்கல்கள்
ADDED : ஜன 22, 2024 12:46 AM

வருமான வரி திட்டமிடல் முக்கியமானது தான். இந்த திட்டமிடலில் வரி சேமிப்பு முதலீடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. எனினும், வரி சேமிப்பிற்கான முதலீடு என்று வரும் போது, வரி சேமிப்பை மட்டுமே மனதில் கொண்டு செயல்படுவது பிழையாக அமையலாம்.
பலரும் தங்கள் நிதி தேவைக்கு ஏற்றவையா என்பதை கணக்கில் கொள்ளாமல், வரி சேமிப்பு நோக்கில் காப்பீடு பாலிசிகள் அல்லது இதர வரி சேமிப்பு முதலீடுகளை மேற்கொள்கின்றனர். வரி சேமிப்பு பலனை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவதால் ஏற்படும் சிக்கல்களை பார்க்கலாம்.
இலக்கு தவறுதல்:
முதலீடுகள் நம் நிதி இலக்குகளுக்கு ஏற்ப அமைய வேண்டும். வரி சேமிப்பு நோக்கில் மட்டும் செயல்படும் போது, முதலீடுகள் நிதி இலக்குகளுக்கு பொருந்தாமல்போகலாம். இது ஏற்றதல்ல. உதாரணமாக, இளம் முதலீட்டாளர்கள் எனில் முதலீடு தொகுப்பில் வளர்ச்சி நோக்கிலான முதலீடுகள் இருக்க வேண்டும்.
முதலீடு வாய்ப்புகள்:
வரி சேமிப்பை முதன்மையாக கருதும் போது, ஏற்ற முதலீடுகளை தேர்வு செய்வதற்கான வாய்ப்புகள் பாதிக்கப்படும். வரி சேமிப்பு முதலீடுகள் பெரும்பாலும் 'லாக்- இன்' காலம் கொண்டிருக்கும். இது, முதலீட்டின் பணமாக்கல் தன்மையை பாதிக்கும்.
நிதி முடக்கம்:
வரி சேமிப்பு முதலீடுகளை நினைத்த போது விலக்கிக் கொள்ள முடியாது. எனவே, வேறு முக்கிய தேவைகளுக்கு பணம் தேவையெனில், முதலீட்டை பணமாக்குவது சிக்கலாகலாம். இதனால், முதலீட்டை உரிய தேவைக்காக அணுக முடியாமல் போகலாம். முதலீடு செய்யும் போது அவற்றை அணுகும் வசதியையும் பரிசீலிக்க வேண்டும்.
வாரிசு சிக்கல்:
வரி சேமிப்பு முதலீடுகளை வாரிசுகளுக்கு மாற்றித் தருவதும் சிக்கலாகலாம். அதிலும் குறிப்பாக வாரிசுகள் வெளிநாடுகளில் வசிக்கும் போது, முதலீட்டை அவர்கள் பராமரிப்பது கடினம். 'நாமினி' தொடர்பான சிக்கல்களும் உண்டாகலாம்.
ஏற்ற முதலீடு:
எனவே, வரி சேமிப்பு முதலீட்டை நாடும் போது, அந்த முதலீடு மற்றவை நோக்கிலும் ஏற்றதா என்பதை பார்க்க வேண்டும். குறுகிய கால பலனை விட நீண்ட கால பலன் முக்கியம். வைப்பு நிதி அல்லது மியூச்சுவல் பண்ட் போன்ற முதலீடுகள் பராமரிக்க எளிதானவை. சரியான கலவையில் முதலீட்டை தேர்வு செய்ய வேண்டும்.