/
செய்திகள்
/
வர்த்தகம்
/
சேமிப்பு திட்டம்
/
ஏறுமுகத்தில் தங்கம் உங்கள் முதலீடு உத்தி என்ன?
/
ஏறுமுகத்தில் தங்கம் உங்கள் முதலீடு உத்தி என்ன?
ADDED : ஜன 08, 2024 12:46 AM

தங்கத்தின் விலை போக்கை தீர்மானிக்கக்கூடிய அம்சங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கான உத்தி பற்றி ஒரு அலசல்.
கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தங்கத்தின் விலை போக்கு ஏறுமுகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் பலவீனமான போக்கு, வட்டி விகித அம்சம் மற்றும் சர்வதேச போர் சூழ்நிலை உள்ளிட்ட அம்சங்கள், தங்கத்தின் விலை ஏறுமுகமாக இருப்பதற்கான காரணங்களாக அமைந்தன.
இந்நிலையில், இந்த ஆண்டும் தங்கத்தின் ஏறுமுகம் தொடரும் என வல்லுனர்கள் கணிக்கின்றனர். பணவீக்கம் மிதமாவது, மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை குறைக்கலாம் எனும் எதிர்பார்ப்பு ஆகிய அம்சங்கள் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடரும் ஏறுமுகம்
தங்கம் பாதுகாப்பான, நம்பகமாக முதலீடாக கருதப்படுவதால், போர் உள்ளிட்ட பதற்றமான காலங்களில் அதிகம் நாடப்படுகிறது. உக்ரைன் போர் நீடிக்கும் சூழலில், இஸ்ரேல்- பாலஸ்தீன மோதலால் தொடரும் பதற்றம், மத்திய வங்கிகள் தங்கத்தை நாடுவதை அதிகமாக்கியுள்ளது. இந்த போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பின்னணியில், தங்கம் தொடர்பான முதலீட்டாளர்களின் உத்தி எப்படி இருக்க வேண்டும் எனும் கேள்வி முக்கியமாகிறது.
பொதுவாக ஏறுமுகமான நிலையில் தங்கத்தை வாங்குவது தொடர்பான கேள்விக்கான பதில் சவாலானது. திருமணம் போன்ற தேவைக்காக தங்கம் வாங்குவது என்றால், உடனடியாக வாங்குவது ஏற்றதாக இருக்கும்.
எனினும் முதலீடு நோக்கில் வாங்குவது என்றால், காத்திருப்பது சரியான உத்தியாக இருக்கும் எனும் கேள்வி எழலாம்.
எனவே, தங்கம் தொடர்பான முதலீடு உத்தியை தீர்மானிக்க பல்வேறு அம்சங்களை மனதில் கொள்ள வேண்டும். தங்கத்தின் விலை மீது தாக்கம் செலுத்தும் போக்குகளை அறிந்து கொள்வது அவசியம். எதிர்கால தேவையை தீர்மானிக்கக்கூடிய அம்சங்களையும் கவனிக்க வேண்டும்.
நிதி இலக்குகள்@@
ஏற்கனவே பார்த்தது போல, போர் பதற்றம், மத்திய வங்கியின் நிலைப்பாடு உள்ளிட்ட அம்சங்கள் தங்கம் விலை உயர காரணமாகலாம்.
இப்போது தங்கம் வாங்கும் முடிவை நிதி இலக்குகளுடன் பொருத்திப் பார்க்க வேண்டும். விரிவாக்கம், செல்வ வளம், நீண்ட கால பலன் உள்ளிட்ட அம்சங்களை பரிசீலித்து, அதன் அடிப்படையில் தீர்மானிக்க வேண்டும்.
முதலீட்டிற்கான கால அளவும் முக்கியம். குறுகிய கால நோக்கில் வாங்குவது எனில், விலை போக்கு மிகவும் முக்கியம். நீண்ட கால இலக்கு எனில், விலை ஏற்றத்தாழ்வு பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.
தங்கத்தை வாங்குவது தொடர்பான இடர் அம்சத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும். எதிர்கால ஏற்ற இறக்கம், முதலீட்டின் மதிப்பை பாதிக்குமா என்று யோசிக்க வேண்டும். எனவே, மொத்தமாக வாங்குவதை விட, சிறிய அளவில் தொடர்ச்சியாக வாங்குவது ஏற்ற உத்தியாக அமையலாம்.
தங்கம் வாங்குவதற்கான வழி முக்கியம். சீரான முதலீட்டிற்கு டிஜிட்டல் தங்கம், இ.டி.எப்., ஆகியவை ஏற்றவை. தங்க சேமிப்பு பத்திரங்களையும் பரிசீலிக்கலாம்.
ஆதாயம் காணும் வகையில் முடிவு எடுப்பதை விட, சந்தை சூழலை கவனித்து பொருத்தமான வகையில் முதலீடு செய்ய வேண்டும். நிதி இலக்குகள் மற்றும் நீண்ட கால உத்தியை முக்கிய அம்சமாக கருத வேண்டும்.