முக்கிய பிரச்னைகளைப் பற்றி பேசவில்லை; பிரதமர் உரை பற்றி கார்கே விமர்சனம்
முக்கிய பிரச்னைகளைப் பற்றி பேசவில்லை; பிரதமர் உரை பற்றி கார்கே விமர்சனம்
UPDATED : டிச 01, 2025 04:18 PM
ADDED : டிச 01, 2025 04:17 PM

புதுடில்லி: முக்கிய பிரச்னைகளை பற்றி பேசுவதை விட்டுவிட்டு, பிரதமர் மோடி நாடக உரை நிகழ்த்துகிறார் என்று எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே கூறி உள்ளார்.
பார்லிமெண்ட் குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. கூட்டத் தொடருக்கு முன்னதாக பார்லி. வளாகத்தில் நிருபர்களிடம் பேசிய பிரதமர் மோடி, எதிர்க்கட்சிகள் நாடகம் நடத்தாமல், பிரச்னைகளை முன் வைத்து செயல்பட வேண்டும். அவைகள் மக்கள் பிரச்னைகளை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.
இந் நிலையில் எதிர்க்கட்சித் தலைவரும், எம்பியுமான மல்லிகார்ஜுன கார்கே தமது எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது;
குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளில், பார்லி.யின் முக்கிய பிரச்னைகளை பேசுவதற்கு பதிலாக, பிரதமர் மோடி மீண்டும் ஒரு முறை தனது நாடக உரையை நிகழ்த்தியுள்ளார்.
11 ஆண்டுகளாக அரசாங்கம் பார்லி. அமைப்பையும் தொடர்ந்து நசுக்கி வருகிறது என்பதுதான் உண்மை. மேலும் இதுபோன்ற நிகழ்வுகளின் நீண்ட பட்டியல் நன்கு அறியப்பட்டதாகும்.
கடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில் 12 மசோதாக்கள் அவசரமாக நிறைவேற்றப்பட்டன. அவற்றில் சில மசோதாக்கள் 15 நிமிடங்களுக்குள் எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்பட்டன.
விவசாயிகளுக்கு எதிரான கருப்புச் சட்டங்கள், ஜிஎஸ்டி, பிஎன்எஸ்எஸ் போன்ற மசோதாக்களை எப்படி புல்டோசர் மூலம் தூக்கி எறிந்தீர்கள் என்பதை முழு நாடும் கண்டிருக்கிறது.
மணிப்பூர் பிரச்சனை எழுப்பப்பட்ட இந்த பார்லி.யிலேயே, எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டுவரும் வரை நீங்கள் அமைதியாக இருந்தீர்கள். பணிச்சுமையால் எஸ்ஐஆர் பணிகளில் ஈடுபட்டுள்ள பிஎல்ஓக்கள் தொடர்ந்து தங்கள் உயிரை இழந்து வருகின்றனர்.
எதிர்க்கட்சிகள் 'ஓட்டுரிமை' உள்ளிட்ட பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகின்றன, நாங்கள் அவற்றை பார்லி.யில் தொடர்ந்து எழுப்புவோம்.
கவனச்சிதறல் நாடகத்தை நிறுத்திவிட்டு, மக்களின் உண்மையான பிரச்னைகள் குறித்து விவாதத்தில் ஈடுபட வேண்டும்.
இவ்வாறு தமது எக்ஸ் தள பதிவில் மல்லிகார்ஜூன கார்கே குறிப்பிட்டுள்ளார்.

