எந்த நாட்டுக்கு போனாலும் சொந்த நாட்டை மறக்க கூடாது என்.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி பேச்சு
எந்த நாட்டுக்கு போனாலும் சொந்த நாட்டை மறக்க கூடாது என்.ஐ.டி., பட்டமளிப்பு விழாவில் துணை ஜனாதிபதி பேச்சு
ADDED : டிச 01, 2025 05:56 AM

சண்டிகர்: “ஆராய்ச்சி மற்றும் புதுமை ஆகியவை இந்தியாவின் தொழில்நுட்ப பயணத்தை இயக்கும் இரட்டை இயந்திரங்களாக செயல்படுகின்றன,”என, துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் பேசினார்.
ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின், 20வது பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன், மாணவ - மாணவியருக்கு பட்டம் வழங்கிப் பேசியதாவது:
புதுமைகள் நம் நாட்டின் அடையாளத்தை பிரதிபலிக்கின்றன. இதன் வாயிலாக மனிதகுலத்துக்கே சேவை செய்யும் போது நமக்கு ஆத்ம திருப்தி ஏற்படுகிறது.
இளைஞர்கள் போதைப் பொருட்களிலிருந்து விலகி இருக்க வேண்டும். இன்றைய உலகில் ஒவ்வொரு துறையும் மனிதகுலம் இதற்கு முன் கண்டிராத வேகத்தில் முன்னேறி வருகிறது.
தொழில்களை வடிவமைக்கும் சக்தியாக தொழில் நுட்பம் வளர்ந்து வருகிறது. உலகில் எல்லாம் மாறிக்கொண்டே இருக்கிறது.
ஆராய்ச்சி மற்றும் புதுமைகள் ஆகியவை, தொழில் நுட்ப பயணத்தை இயக்கும் இரட்டை இயந்திரங்களாக செயல்படுகின்றன என்பதை இளம் தலைமுறையினர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
உள்நாட்டு கண்டுபிடிப்பு, நம் நாட்டின் வளங்கள் மற்றும் தேவைகளில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். தொழில்நுட்பத்தின் உண்மையான நோக்கம் முன்னேற்றம் மட்டும் அல்ல. தெளிவான நோக்கத்துடன் முன்னேற வேண்டும்.
நிலையான உற்பத்தி, புத்திசாலித்தனமான செயல்பாடு, குவாண்டம் தொழில்நுட்பங்கள், சுகாதார தொழில்நுட்பங்கள், விவசாய கண்டுபிடிப்பு மற்றும் பசுமை உள்கட்டமைப்பு ஆகிய அதிமுக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் இளம் கண்டுபிடிப்பாளர்கள் உருவாக வேண்டும். இந்த ஆராய்சிகள்தான் சர்வதேச அளவில் நம் நாட்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும். அதேநேரத்தில் நம் நாட்டின் பாரம்பரியத்தையும் மறந்து விடக்கூடாது.
இளம் தலைமுறையினரின் புத்திசாலித்தனம், உற்சாகம் மற்றும் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஆர்வம் ஆகியவற்றால் தான் நம் நாடு தொழில்நுட்பத்தை உருவாக்கும் நிலைக்கு வளர்ந்து வருகிறது. டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா, மற்றும் மேக் இன் இந்தியா போன்ற முயற்சிகளால் நாட்டில் தொழில்முனைவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
'தேசிய கல்விக் கொள்கை- - 2020' நம்நாட்டை விஸ்வகுருவாக மாறுவதற்கான முற்போக்கான பாதையில் செலுத்துகிறது. பிரிட்டிஷ் ஆட்சியில் நம் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட மெக்காலே கல்வித் திட்டம் பெரும்பாலும் எழுதப்படிக்க தெரிந்தவர்களை மட்டுமே உற்பத்தி செய்தது. ஆனால், நம் தேசியக் கல்விக் கொள்கை படைப்பாற்றல் மற்றும் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கிறது.
தேசிய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் படித்த ஏராளமானோர், 'ஸ்டார்ட் அப்' எனப்படும் துவக்கநிலை நிறுவனங்களை வெற்றிகரமாக நடத்துகின்றனர். இது, தனிப்பட்ட ஒருவரின் வளர்ச்சிக்கு மட்டுமின்றி, நாட்டின் வளர்ச்சிக்கும் நாட்டின் உள்கட்டமைப்புக்கும் மகத்தான பங்களிப்பு.
உலகின் எந்த நாட்டுக்குச் சென்றாலும், இந்தியா எப்போதும் உங்கள் இதயத்தில் இருக்கட்டும். நம் நாட்டுக்கு சேவை செய்வது உங்கள் நோக்கமாக இருக்கட்டும்.
அடுத்த கூகுள், அடுத்த டெஸ்லா, அடுத்த ஸ்பேஸ் எக்ஸ் ஆகியவை இளம் தலைமுறையினர் வாயிலாக நம் நாட்டில் உருவாக வேண்டும்.
குருக்ஷேத்ரா தேசிய தொழில்நுட்ப நிறுவனம், பெருமைமிக்க பாரம் பரியத்தைக் கொண்ட கல்வி நிறுவனம். இங்கு படித்து உலகம் முழுதும் 40,000க்கும் மேற்பட்டோர் முக்கியப் பதவிகளில் இருக்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஹரியானா கவர்னர் ஆஷிம்குமார் கோஷ், முதல்வர் நயாப் சிங் சைனி, குருக்ஷேத்ரா தொழில்நுட்ப பல்கலை இயக்குனர் பி.வி.ரமணா ரெட்டி உள்ளிட்டோர் பங் கேற்றனர்.

