/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 2023-24 நிதியாண்டில் 35% அதிகரிப்பு
/
மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 2023-24 நிதியாண்டில் 35% அதிகரிப்பு
மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 2023-24 நிதியாண்டில் 35% அதிகரிப்பு
மியூச்சுவல் பண்டுகளின் சொத்து மதிப்பு 2023-24 நிதியாண்டில் 35% அதிகரிப்பு
ADDED : ஏப் 17, 2024 12:57 AM

புதுடில்லி: மியூச்சுவல் பண்டுகளின் கீழ் நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் மதிப்பு கடந்த நிதியாண்டில் 35 சதவீதம் அதிகரித்து 53.40 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என, 'ஆம்பி' தெரிவித்துள்ளது. அதிகரித்து வரும் சில்லரை முதலீட்டாளர்கள் மற்றும் வலுவான பங்குச் சந்தை செயல்பாடுகளே இதற்கு முக்கியக் காரணம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 'ஆம்பி' மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த நிதியாண்டு மியூச்சுவல் பண்டுகளின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் சொத்துக்களின் மதிப்பு 14 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து 53.40 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. கடந்த 2021ம் நிதியாண்டில் 41 சதவீத அதிகரிப்புக்கு பிறகு இதுவே அதிகபட்சமாகும்.
மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் கடந்த நிதியாண்டில் 4.46 கோடி அதிகரித்து 17.78 கோடியை எட்டியது. மொத்த முதலீட்டாளர்களில் ஆண்கள் 77 சதவீதமும்; பெண்கள் 23 சதவீதமும் இருந்தனர்.
மியூச்சுவல் பண்டுகளில் சீரான முறையில் முதலீடு செய்ய வழிவகுக்கும் எஸ்.ஐ.பி., முறையில் முதலீடு செய்வோரின் எண்ணிக்கையும் கடந்த நிதியாண்டில் தொடர்ந்து அதிகரித்தது. இப்பிரிவில் கடந்த மார்ச் மாதத்தில் சாதனை உச்சமாக 19,271 கோடி ரூபாய் முதலீடு மேற்கொள்ளப்பட்டது. ஒட்டுமொத்தமாக, கடந்த நிதியாண்டில் எஸ்.ஐ.பி.,க்களில் மேற்கொள்ளப்பட்ட முதலீடுகளின் நிகர மதிப்பு 2 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
மியூச்சுவல் பண்டுகளின் இந்த வளர்ச்சியில் சில்லரை முதலீட்டாளர்கள் முக்கிய பங்கு வகித்துள்ளனர். குறிப்பாக பங்கு சார்ந்த மற்றும் ஹைப்ரிட் மியூச்சுவல் பண்டுகளில் இவர்களின் பங்களிப்பு சிறப்பாக இருந்தது.
பங்கு சார்ந்த மியூச்சுவல் பண்டுகளின் கீழ் நிர்வகிக்கப்பட்டு வரும் சொத்துக்களின் மதிப்பு கடந்த நிதியாண்டில் 55 சதவீதம் அதிகரித்து 23.50 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. கடன் சார்ந்த திட்டங்களால் நிர்வகிக்கப்பட்டு வரும் சொத்து மதிப்பு 7 சதவீதம் அதிகரித்து 12.62 லட்சம் கோடி ரூபாயாகவும்; ஹைப்ரிட் பண்டுகளின் சொத்து மதிப்பு 50 சதவீதத்துக்கு மேல் அதிகரித்து 7 லட்சம் கோடி ரூபாயாகவும் இருந்தது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

