/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஜூன் காலாண்டு ஜி.டி.பி.,யில் மாறுபட்ட கணிப்பு
/
ஜூன் காலாண்டு ஜி.டி.பி.,யில் மாறுபட்ட கணிப்பு
ADDED : ஆக 23, 2024 01:51 AM

புதுடில்லி:கடந்த ஆறு காலாண்டுகளில் குறைந்தபட்சமாக, ஜூன் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக இருக்கும் என, தர மதிப்பீட்டு நிறுவனமான 'இக்ரா' கணித்து உள்ளது.
மேலும் நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 6.80 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஒருபுறம் இக்ரா, கடந்த காலாண்டில் வளர்ச்சி குறைந்திருக்கும் என்று தெரிவித்திருக்கும் நிலையில், மற்றொரு புறம் மத்திய நிதி அமைச்சகம், வளர்ச்சி தக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து உள்ளது.
மூலதன செலவீனம்
தேர்தல் நடவடிக்கைகள் காரணமாக அரசின் மூலதன செலவீனம் குறைந்தது மற்றும் நகர்ப்புற நுகர்வோரின் தேவை குறைந்துள்ளது ஆகியவற்றை சுட்டிக்காட்டி, ஜூன் காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதமாக குறையும் என இக்ரா தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் காலாண்டில் இது, 7.80 சதவீதமாக இருந்தது.
கடந்தாண்டு பருவமழை ஏற்படுத்திய பாதிப்புகள் மற்றும் நடப்பாண்டின் அதன் சுமாரான துவக்கம் ஆகியவை ஊரக பகுதிகளின் நுகர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், விற்பனை விலை குறைவால் தயாரிப்பு துறை நிறுவனங்களின் லாபம் பாதிக்கப்பட்டதாகவும்; வெப்ப அலையின் தாக்கம், சேவைகள் துறையில் உணரப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
இருவேறு கணிப்புகள்
இதற்கிடையே, ஜி.எஸ்.டி., வருவாய், ஏற்றுமதி மற்றும் அன்னிய நேரடி முதலீடுகள் அதிகரித்துள்ளது, கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி தக்கவைக்கப்பட்டுள்ளதை உணர்த்துவதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நிதி அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பொருளாதார விவகாரங்கள் துறை அதன் மாதாந்திர பொருளாதார ஆய்வறிக்கையில் இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும், தேவை அதிகரிப்பு, புதிய ஆர்டர்களின் எண்ணிக்கையில் உயர்வு ஆகியவற்றால் தயாரிப்பு துறையும்; சுற்றுலா மற்றும் ஹோட்டல் தொழில்களின் செயல்பாடுகளால் சேவைகள் துறையும், வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு வேறு கணிப்புகள் வெளியிடப்பட்டுள்ள நிலையில், இம்மாத இறுதியில், மத்திய புள்ளியியல் அமைச்சகம், ஜூன் காலாண்டு பொருளாதார வளர்ச்சி குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிட இருக்கிறது.