/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இறக்கம் வந்தாலும், மீள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன
/
இறக்கம் வந்தாலும், மீள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன
இறக்கம் வந்தாலும், மீள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன
இறக்கம் வந்தாலும், மீள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன
ADDED : ஜூன் 23, 2024 12:51 AM

* நம் நாட்டின் சந்தை மதிப்பில், ஸ்மால் மற்றும் மிட் கேப் நிறுவனங்களின் பங்கு, கடந்த மே மாதம் 36.30 சதவீதம் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதையடுத்து, இந்நிறுவனங்களின் மதிப்பு மிகைப் படுத்தப்படுவதாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன
* விற்பனை குறைவால், தயாரித்த கார்களின் இருப்பு அதிகரித்து காணப்படும் நிலையில், கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக் காலத்தை, 60 நாட்களிலிருந்து 90 நாட்களாக உயர்த்துமாறு, பயணியர் வாகன தயாரிப்பாளர்கள், நிதி நிறுவனங்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்
* கடந்த ஏப்ரல் முதல் ஜூன் 17ம் தேதி வரையிலான, நாட்டின் நிகர நேரடி வரி வருவாய் 21 சதவீதம் அதிகரித்து, 4.62 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. இந்த காலகட்டத்தில், மொத்த நேரடி வரி வருவாய் 5.15 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், ரீபண்டாக 53,300 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது
* நடப்பு நிதியாண்டில், ஜூன் 15ம் தேதி வரையிலான 'அட்வான்ஸ்' வரி வருவாய், கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், 27.60 சதவீதம் அதிகரித்து, 1.48 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. இதில், 1.14 லட்சம் கோடி ரூபாய் கார்ப்பரேட் வரி வருவாய்; 34,362 கோடி ரூபாய் தனி நபர் வருமான வரி வருவாய்
* கடந்த ஏப்ரல் மாதம், நாட்டின் முறைசார் வேலை வாய்ப்புகள் ஆறு ஆண்டு உச்சத்தை எட்டியுள்ளது. இ.பி.எப்.ஓ., தரவுகளின் படி, கடந்த ஏப்ரல் மாதத்தில், நாட்டின் முறை சார் வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கை 18.90 லட்சமாக இருந்தது
* கடந்த ஏப்ரல் மாதம் வெளிநாடு வாழ் இந்தியர்கள், அவர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டு உள்ள 'என்.ஆர்.ஐ.,' டிபாசிட் திட்டங்களில், கிட்டத்தட்ட 8,300 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். கடந்தாண்டு இதே காலகட்டத்தில், கிட்டத்தட்ட 1,250 கோடி ரூபாய் முதலீடுகள் திரும்பப் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வரும் வாரம்
* எம்3 பணப்புழக்கம், அன்னிய செலாவணி கையிருப்பு, உள்கட்டமைப்பு உருவாக்க அளவு, நடப்பு கணக்கு நிலைமை மற்றும் அயல்நாடுகளிலிருந்து வாங்கிய கடனின் அளவு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
* டல்லாஸ் பெட் உற்பத்தி நிறுவனங்களின் குறியீடு, எஸ் அண்டு பி.,/கேஸ் ஷில்லர் வீடுகள் விலை, சிபி நுகர்வோர் மத்தியில் நிலவும் நம்பிக்கை, புதிய வீடுகள் விற்பனை, நீடித்த நாள் உழைக்கும் நுகர்வோர் சாதனங்கள் உற்பத்தி, ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், தனிநபர் வருமானம் மற்றும் தனிநபர் செலவினம் போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
* கடந்தவாரம் செவ்வாயன்று 92 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி, புதனன்று, வர்த்தக நாளின் இறுதியில் 41 புள்ளிகள் இறக்கத்துடனும்; வியாழனன்று 51 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வெள்ளியன்று 65 புள்ளிகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தது
* வரும் வாரத்தில் ஜூன் மாத எப் அண்டு ஓ., வர்த்தக ஒப்பந்தங்கள் நிறைவடைகின்றன. வாரத்தின் ஆரம்பத்தில், இதற்கான நகர்வுகளையே சந்தை சந்திக்க வாய்ப்புள்ளது. இது தவிர செய்திகள், நிகழ்வுகள், மற்றும் பொருளாதாரம் சார்ந்த தரவுகள் போன்றவையும், நிப்டியின் நகர்வை நிர்ணயிப்பதாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
எனவே, வர்த்தகர்கள் இவற்றின் மீது ஒரு கண் வைத்து, அதிக எச்சரிக்கையுடன், மிகவும் குறைந்த எண்ணிக்கையில் நஷ்டத்தை குறைக்க உதவும். மிகவும் குறுகிய அளவிலான ஸ்டாப்லாஸ்களை தவறாமல் உபயோகித்து, வர்த்தகம் செய்வதற்கு முயற்சிக்கலாம்.
டெக்னிக்கல் அனாலிசிஸ் அளவீடுகளில் பார்த்தால், நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கான வாய்ப்பு இருப்பதைப் போன்ற நிலைமையே தென்படுகிறது. இருந்தாலும் செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்கு ஏற்றாற்போல், அவ்வப்போது இறக்கம் வந்தாலும், அதிலிருந்து மீள்வதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 23,377, 23,253 மற்றும் 23,151 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 23,646, 23,791 மற்றும் 23,894 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 23,522 என்ற அளவிற்கு மேலே சென்று, தொடர்ந்து வர்த்தகமாகி வருவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.