/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
வங்கிகளின் அதிக வட்டியால் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
/
வங்கிகளின் அதிக வட்டியால் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
வங்கிகளின் அதிக வட்டியால் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
வங்கிகளின் அதிக வட்டியால் தொழில் நிறுவனங்கள் பாதிப்பு
ADDED : ஜூலை 11, 2024 01:36 AM

சென்னை:வங்கிகளில் வாங்கும் கடனுக்கு, 17.25 சதவீதம் வட்டி வசூலிப்பதால், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 60 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. இவை, மூலப்பொருள் கொள்முதல் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க, வங்கிகளில் கடன் வாங்குகின்றன. அதற்கு, நிர்ணயித்ததை விட அதிக வட்டி வசூலிப்பதாகவும், இதனால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதுகுறித்து, தமிழக சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்க தலைவர் மோகன் கூறியதாவது:
வங்கிகளில் கடன் வாங்கி தான் நிறுவனங்கள் இயங்குகின்றன. மூன்று மாதங்கள் வட்டி மற்றும் அசல் செலுத்தாத நிறுவனத்தை, என்.பி.ஏ., எனப்படும் வாரா கடன் பிரிவில், வங்கிகள் சேர்க்கின்றன.
அதைதொடர்ந்து, வங்கி கணக்கை முடக்குவது, சொத்துக்களை பறிமுதல் செய்வது போன்ற நடவடிக்கைகளிலும் வங்கிகள் இறங்குகின்றன.
சிறு நிறுவனங்களிடம் பொருட்களை வாங்கும் பொதுத்துறை மற்றும் பெரிய நிறுவனங்கள், உடனே பணம் தராமல் தாமதம் செய்கின்றன. இதனால் தான், வங்கி கடனை செலுத்த முடிவதில்லை.
வங்கிகளில், 8 - 9 சதவீத வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. ஆனால், கூடவே பல்வேறு கட்டணங்களும் விதிக்கப்படுகின்றன.
சில வங்கிகள், தாங்களாகவே மதிப்பெண் முறையை அமல்படுத்தி, காசோலை தாமதமாக வழங்குவது போன்றவற்றிற்கு, குறைந்த மதிப்பெண் வழங்குகின்றன.
இதுபோன்ற காரணங்களால், எந்த வித தகவலும் வாடிக்கையாளரிடம் தெரிவிக்காமல், வழங்கிய கடனுக்கு, 17.25 சதவீதம் வரை வட்டி வசூலிக்கின்றன.
இது, அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, என்.பி.ஏ., விதியை, மூன்று மாதங்களுக்கு பதில் ஆறு மாதங்களாக மாற்ற வேண்டும்; வங்கி கடனுக்கான வட்டியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்கம் சார்பில், ரிசர்வ் வங்கி துணை கவர்னருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

