/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
டில்லியில் நுழையும் 'நந்தினி' பால்
/
டில்லியில் நுழையும் 'நந்தினி' பால்
ADDED : ஆக 23, 2024 11:07 PM

புதுடில்லி:கர்நாடகா பால் கூட்டமைப்பின், 'நந்தினி' பால், வரும் அக்டோபர் முதல் தினமும் 2.50 லட்சம் லிட்டர் வீதம், புதுடில்லிக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இது தொடர்பாக, கர்நாடகா பால் கூட்டமைப்பு நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ், டில்லியில் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் தற்போது தினமும் ஒரு கோடி லிட்டருக்கும் அதிகமான பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், ஆந்திரா, மஹாராஷ்டிராவுக்கு தலா 2.50 லட்சம் லிட்டரும்; தமிழகத்துக்கு 40,000 லிட்டரும் தினமும் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வட மாநிலங்களிலும் கால்பதிக்க முடிவு செய்துள்ள நந்தினி, முதல் கட்டமாக, அக்டோபரில் இருந்து டில்லிக்கு தினமும் 2.50 லட்சம் லிட்டர் வழங்க திட்டமிட்டுள்ளது.
அடுத்த ஆறு மாதங்களுக்குள், இதை 5 லட்சம் லிட்டராக உயர்த்த இலக்கு நிர்ணயித்து உள்ளோம். உற்பத்தியாளர்களிடம் இருந்து ஒரு லிட்டர் பாலை 32 ரூபாய்க்கு வாங்குகிறோம்.
போக்குவரத்துக்கு குறைந்தபட்சம் 53 மணி நேரமாகும். ஆனாலும், டில்லியில் பால் வினியோகம் செய்தால், கர்நாடக பால் கூட்டமைப்புக்கு அதிக லாபம் கிடைக்கும். மாநில பால் விவசாயிகளும் பயனடைவர்.
ஹாசன் மாவட்ட பால் சங்கம் வாயிலாக, டில்லிக்கு பால் வினியோகம் செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.