/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
காலாண்டு முடிவுகள் வரப்போவதை கவனத்தில் கொள்ளவும்
/
காலாண்டு முடிவுகள் வரப்போவதை கவனத்தில் கொள்ளவும்
ADDED : ஜூலை 07, 2024 01:35 AM

கடந்த வாரம்
கடந்த ஜூன் மாதம் 16 முதல் 30ம் தேதி வரையிலான காலகட்டத்தில் அன்னிய முதலீட்டாளர்கள், நம் நாட்டின் நிதி சேவைகள் துறையில் 8,162 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இதற்கு முந்தைய மே மாதத்தில், அவர்கள் இப்பிரிவிலிருந்து 8,583 கோடி ரூபாய் திரும்பப் பெற்றது குறிப்பிடத்தக்கது
கடந்த மாதம் இந்திய பங்கு சந்தைகளில் அன்னிய முதலீட்டாளர்கள் மேற்கொண்ட மொத்த முதலீட்டின் மதிப்பு, 4.79 லட்சம் கோடி ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இது, கடந்த இரண்டு ஆண்டுகளில் 2.32 லட்சம் கோடி ரூபாயாக இருந்த மாதாந்திர சராசரியைக் காட்டிலும் இரு மடங்காகும். அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்குகளின் மதிப்பும் 69.47 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், ஐ.பி.ஓ., எனும் புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக தனியார் நிறுவனங்கள் திரட்டிய நிதியின் மதிப்பு, கடந்த ஒன்பது ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் 37 நிறுவனங்கள் 33,610 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன. இதில், 45 சதவீதம் அதாவது 14,190 கோடி ரூபாய், புதிய பங்கு வெளியீடு வாயிலாக மட்டும் திரட்டப்பட்டுள்ளது
நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், வலுவான செயல்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது. கடந்த மாதத்துக்கான தயாரிப்பு துறை உற்பத்தி வளர்ச்சி அடிப்படையிலான பி.எம்.ஐ., குறியீடு, ஜி.எஸ்.டி., வருவாய், வாகன விற்பனை என அனைத்துமே வளர்ச்சி அடைந்துள்ளது, இதன் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது
சமீபகாலமாக சந்தை சிறப்பாகச் செயல்பட்டு வருவதை அடுத்து, புதிய 'டிமேட்' கணக்குகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த மாதம் மட்டும் நம் நாட்டில் புதிதாக 43 லட்சம் டிமேட் கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நாட்டில் உள்ள மொத்த டிமேட் கணக்குகளின் எண்ணிக்கை, முதல் முறையாக 16 கோடியை கடந்துள்ளது
நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், டில்லி, மும்பை உள்ளிட்ட நாட்டின் முக்கிய எட்டு நகரங்களில் வீடு விற்பனை 11 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்நகரங்களில் மொத்தம் 1.73 லட்சம் வீடுகள் விற்கப் பட்டுள்ளன. இதையடுத்து, நடப்பாண்டில் வீடு விற்பனை வளர்ச்சி கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் வாரம்
'எம்3' பணப்புழக்கம், வங்கிகள் வழங்கிய கடன்களின் அளவில் வளர்ச்சி, வங்கிகளில் இருக்கும் வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி, தொழிற்சாலைகளில் உற்பத்தி அளவு, பணவீக்கம் போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
பணவீக்கம், உற்பத்தியாளர்கள் விலை குறியீடு, வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, மிச்சிகன் நுகர்வோர் மனநிலை போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 131 புள்ளிகள் ஏற்றத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 18 புள்ளிகள் இறக்கத்துடனும்; புதனன்று இறுதியில் 162 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வியாழனன்று 15 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வெள்ளியன்று 21 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தது
இருபத்தி ஐந்துக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு முடிவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன. காலாண்டு முடிவுகள், காலாண்டு முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புகள், செய்திகள், நிகழ்வுகள் மற்றும் பொருளாதாரம் சார்ந்த தரவுகள் போன்றவையே நிப்டியின் நகர்வை தீர்மானிப்பதாக இருக்கும். எனவே, வர்த்தகர்கள் இவற்றின் மீது கவனம் வைத்து, மிகவும் குறைந்த எண்ணிக்கையில், நஷ்டத்தை குறைக்க உதவும் 'ஸ்டாப்லாஸ்'களை உபயோகித்து, அதிக எச்சரிக்கையுடன் வர்த்தகம் செய்வதற்கு முயற்சிக்கலாம்.
'டெக்னிக்கல் அனாலிசிஸ்' அளவீடுகளின்படி பார்த்தால், நிப்டியில் ஏற்றம் வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதை போன்ற நிலைமையே தெரிகிறது. தொடர்ந்து ஏற்றம் கண்டு வருவதால், லாபத்தை வெளியே எடுக்கும் நோக்கத்துடனான விற்பனை, அவ்வப்போது வந்து செல்ல வாய்ப்புள்ளது என்பதை வர்த்த கர்கள் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 24,077, 23,831 மற்றும் 23,675 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 24,486, 24,647 மற்றும் 24,803 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24,239 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.