/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இ-வே பில்களின் எண்ணிக்கை ஏப்ரலில் 9.66 கோடியாக சரிவு
/
இ-வே பில்களின் எண்ணிக்கை ஏப்ரலில் 9.66 கோடியாக சரிவு
இ-வே பில்களின் எண்ணிக்கை ஏப்ரலில் 9.66 கோடியாக சரிவு
இ-வே பில்களின் எண்ணிக்கை ஏப்ரலில் 9.66 கோடியாக சரிவு
ADDED : மே 09, 2024 02:01 AM

புதுடில்லி: 'இ - வே பில்' உருவாக்கம், கடந்த ஏப்ரல் மாதத்தில் 9.66 கோடியாக குறைந்துள்ளது. இதனால், மே மாத ஜி.எஸ்.டி., வருவாய் சரிவடைய வாய்ப்புள்ளதாகக்கருதப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்தில், வரலாறு காணாத எண்ணிக்கையை பதிவு செய்த இ - வே பில் எனப்படும் மின்னணு விலைப்பட்டியல் உருவாக்கம், ஏப்ரல் மாதத்தில் 9.66 கோடியாக குறைந்துள்ளது. இது, மே மாதத்திற்கான ஜி.எஸ்.டி., வசூலில் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும் என தெரிகிறது. இந்த தாக்கங்கள் ஜூன் 1ம் தேதி வெளியாகும் ஜி.எஸ்.டி., வருவாய் தகவல்களில் தெரிய வரும்.
வழக்கமாக, நிதியாண்டின் இறுதியில் கையிருப்பு சரக்குகள் விற்று தீர்க்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் இ - வே பில்கள் மிக அதிக எண்ணிக்கையை பதிவு செய்திருந்தது. இருப்பினும், நடப்பு நிதியாண்டின் முதல் மாதம் என்பதால், ஏப்ரலில் சரக்கு விற்பனை குறைவாக உள்ளது. இதனால் இ - வே பில் உருவாக்கம் பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதத்தில், 10.35 கோடி இ - வே பில்கள் உருவாக்கப்பட்டதன் காரணமாக, ஏப்ரலில் ஜி.எஸ்.டி., வசூல், இதுவரை இல்லாத அளவாக 2.10 லட்சம் கோடி ரூபாயை எட்டியது. கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில், இ - வே பில்களின் எண்ணிக்கை 9.09 கோடியாக இருந்தது. அந்த நேரத்தில் இது சாதனையாக இருந்தது. இதன் காரணமாக மறு மாதமான ஏப்ரலில், ஜி.எஸ்.டி., வசூல் 1.87 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இருப்பினும், அந்த ஆண்டு ஏப்ரலில், இ - வே பில் உருவாக்கம் 8.44 கோடியாக குறைந்ததையடுத்து, மே மாத வசூல் 1.57 லட்சம் கோடியாக சரிவடைந்தது.
கடந்த 2018ல் இ - வே பில் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, ஒரு மாதத்தில் 10 கோடியை தாண்டிய இரண்டாவது மாதம், மார்ச் மாதம் ஆகும். இதற்குமுன், கடந்த அக்டோபரில் 10.03 கோடி இ - வே பில்கள் உருவாக்கப்பட்டதே, இதுவரை இல்லாத அளவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரலில் 'இ - வே பில்' எண்ணிக்கை குறைந்ததை அடுத்து மே மாத ஜி.எஸ்.டி., வருவாய் குறையக்கூடும்