ADDED : மார் 06, 2025 12:02 AM

10 நாள் சரிவுக்கு 'குட்பை'
வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் நல்ல உயர்வுடன் நிறைவு செய்தன. தொடர்ந்து, கடந்த 10 நாட்களாக நிப்டி சரிவை கண்ட நிலையில், நேற்று அதற்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டது. ஆசிய பங்குச் சந்தைகளின் தொடர்ச்சியாக, வர்த்தகம் ஆரம்பித்த போதே இந்திய சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.
உலக வர்த்தகப் போர் பதற்றத்துக்கு மத்தியில், அமெரிக்கா சில பொருட்களுக்கு வரியை குறைக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் இந்தியாவின் தயாரிப்பு, சேவை ஆகிய துறைகளின் வளர்ச்சியை குறிக்கும் பிப்ரவரி மாதத்திற்கான பி.எம்.ஐ., குறியீடு வளர்ச்சி பெற்றிருப்பதாக தரவுகள் வெளியாகின.
இத்தகைய செய்திகளை அடுத்து, முன்னணி நிறுவன பங்குகளை வாங்குவதில், முதலீட்டாளர்கள் அதிகளவில் ஆர்வம் காட்டினர். இதனால், வர்த்தக நேரத்தின் போது சென்செக்ஸ், நிப்டி தலா 2 சதவீதம் அளவுக்கு உயர்வை கண்டன.
பெருநிறுவனங்களின் சந்தை மதிப்பு 4.12 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும்; நடுத்தர நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1.89 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும்; சிறு நிறுவனங்களின் சந்தை மதிப்பு 1.08 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கும் உயர்வை கண்டன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 2,895 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.49 சதவீதம் குறைந்து, 70.69 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 13 பைசா உயர்ந்து, 87.06 ரூபாயாக இருந்தது.