/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பங்கு சந்தை நிலவரம்:எட்டாவது நாளாக ஏமாற்றம்
/
பங்கு சந்தை நிலவரம்:எட்டாவது நாளாக ஏமாற்றம்
ADDED : பிப் 15, 2025 12:30 AM

எட்டாவது நாளாக ஏமாற்றம்
இந்த வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்றும், இந்திய சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன.
அமெரிக்க அதிபர் டிரம்ப் -- பிரதமர் மோடி சந்திப்பின் போது, 2030க்குள் இந்தியா -- அமெரிக்கா இடையேயான இருநாட்டு வர்த்தகத்தை 43 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.
இருப்பினும், வர்த்தக போர் அபாயம், அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை நீடிப்பதால், எச்சரிக்கையுடன் அணுகிய முதலீட்டாளர்கள், பங்கு களை அதிக அளவில் விற்றனர். இதனால், சிறிது நேரத்திலேயே சந்தை சரியத் துவங்கியது. வர்த்தக நேரத்தின் போது, நிப்டி, சென்செக்ஸ் தலா ஒரு சதவீதத்துக்கு மேல் இறக்கம் கண்டன.
சந்தையில் ஊசலாட்டம் நீடித்தது. முடிவில், ஓரளவு சமாளித்து, சிறிய இறக்கத்துடன் நிறைவு செய்தது. தொடர்ச்சியாக, எட்டாவது வர்த்தக நாளாக நிப்டி, சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு செய்தன. வாராந்திர அடிப்படையில், சந்தை குறியீடுகள் நடப்பாண்டின் மோசமான சரிவை பதிவு செய்தது.
பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., 17 ஆண்டுகளுக்கு பிறகு, மூன்றாம் காலாண்டில்
262 கோடி ரூபாயை லாபமாக ஈட்டியுள்ளது.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள், 4,295 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்றனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.55 சதவீதம் அதிகரித்து, 75.43 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 21 பைசா அதிகரித்து, 86.71 ரூபாயாக இருந்தது.