/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
டெக்னிக்கல் கணிப்புகள் தவறாகிவிடும் வாய்ப்பும் உள்ளது
/
டெக்னிக்கல் கணிப்புகள் தவறாகிவிடும் வாய்ப்பும் உள்ளது
டெக்னிக்கல் கணிப்புகள் தவறாகிவிடும் வாய்ப்பும் உள்ளது
டெக்னிக்கல் கணிப்புகள் தவறாகிவிடும் வாய்ப்பும் உள்ளது
ADDED : ஆக 11, 2024 02:08 AM

கடந்த வாரம்
கடந்த திங்களன்று, அமெரிக்க மந்த நிலை அச்சம் காரணமாக நம் சந்தைகள் கடும் சரிவைக் கண்டன. நிப்டி 662 புள்ளிகள் சரிந்தது. வலுவான வளர்ச்சியும், மியூச்சுவல் பண்டுகளில் தொடர்ச்சியான முதலீடுகளும், கடந்த இரண்டு ஆண்டுகளில், பெரும் வீழ்ச்சிகளிலிருந்து நம் பங்குச் சந்தைகளை பாதுகாத்துள்ளதாக, சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்
கடந்த ஜூலை மாத நிலவரப்படி, இந்தியாவிலுள்ள கார்ப்பரேட் நிறுவனங்களின் முறையான வேலைவாய்ப்புகளுக்கான காலிப் பணியிடங்கள் 2.60 லட்சமாக குறைந்துள்ளது என 'எக்ஸ்பெனோ' எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் காலிப் பணியிடங்கள் 3.40 லட்சமாக இருந்தது
கடந்தாண்டு ஜூலை மாதத்துடன் ஒப்பிடுகையில், நடப்பாண்டு ஜூலையில், வாகன விற்பனை 13.84 சதவீதம் அதிகரித்து, 20.34 லட்சமாக இருந்தது என, வாகன முகவர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது
தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களில், அன்னிய முதலீட்டாளர்களின் பங்கு, கடந்த ஜூன் காலாண்டில் 17.38 சதவீதமாக சரிந்துள்ளது. அதே நேரத்தில், உள்நாட்டு முதலீட்டாளர்களின் பங்கு 16.23 சதவீதமாக அதிகரித்துள்ளது
நம் நாட்டு வாகனத்துறை நிறுவனங்களில் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீடு அதிகரித்துள்ளது. எதிர்பார்த்ததை விட சிறப்பான காலாண்டு முடிவுகள் மற்றும் மூலப் பொருட்களின் விலை குறைவு ஆகிய காரணங்களால், இப்பிரிவில், நீண்ட காலமாக 6 சதவீதமாக இருந்த அவர்களின் முதலீடு, கடந்த மாதம் 8.10 சதவீதத்தை எட்டியுள்ளது
பணியாளர் மற்றும் மூலப் பொருட்களின் விலை அதிகரிப்பால், நாட்டின் சேவைத்துறை உற்பத்தி வளர்ச்சி, கடந்த மாதம் 60.30 புள்ளிகளாக குறைந்தது
மியூச்சுவல் பண்டு திட்டங்களில் சீரான முறையில் முதலீடு செய்ய வழிவகை செய்யும் எஸ்.ஐ.பி., முறையில், கடந்த மாதம் முதல் முறையாக 23,000 கோடி ரூபாய்க்கும் கூடுதலாக முதலீடு செய்யப்பட்டுள்ளது.
வரும் வாரம்
தொழிற்சாலைகளில் நடந்த உற்பத்தி, பணவீக்க விகிதம், மொத்த விற்பனை குறியீட்டு அளவில் பணவீக்க அளவு, பயணியர் வாகன விற்பனை, ஏற்றுமதி இறக்குமதி நிகர அளவு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
நுகர்வோர்களின் பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்பு, உற்பத்தியாளர்களின் பி.எம்.ஐ., குறியீடு, பணவீக்க விகிதம், சில்லரை விற்பனை அளவு, தொழிற்சாலைகளில் நடந்த உற்பத்தி, கட்டடங்கள் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதிகளின் எண்ணிக்கை போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகளும் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 662 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 63 புள்ளிகள் இறக்கத்துடனும்; புதனன்று 304 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வியாழனன்று 180 புள்ளிகள் இறக்கத்துடனும்; வெள்ளியன்று வர்த்தக நாளின் இறுதியில் 250 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில் திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில் 350 புள்ளிகள் இறக்கத்துடன், நிப்டி நிறைவடைந்திருந்தது
வரும் வாரம், நான்கு வர்த்தக தினங்களை கொண்ட வாரம். ஏராளமான நிறுவனங்களின் நடப்பு நிதியாண்டுக்கான முதல் காலாண்டு முடிவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன. உலகளாவிய செய்திகள் மற்றும் நிறுவனங்களின் காலாண்டு செயல்பாடுகள் போன்றவையே, வரும் வாரத்தில் நிப்டியின் அசைவை முடிவு செய்வதாக இருக்க வாய்ப்புள்ளது
டெக்னிக்கல் அனாலிசிஸ் அளவீடுகளின் படி பார்த்தால், நிப்டியில் ஏறுவதற்கு தயக்கம் உருவாகியுள்ள சூழல் இருப்பதைப் போன்ற நிலைமையே தென்படுகிறது. பெரிய அளவிலான இறக்க ஏற்றங்களை உலக சந்தைகள் சந்தித்துவரும் இது போன்ற சூழலில், உலகளாவிய செய்திகள் மற்றும் நிகழ்வுகள் மட்டுமே இனி சந்தையின் போக்கை நிர்ணயிக்கும் என்பதால், சந்தையின் நடவடிக்கைகள் குறித்து டெக்னிக்கல் அனாலிசிஸ் வைத்துக்கொண்டு கணிக்கப்படும் கணிப்புகள் அடிக்கடி பொய்யாகிப்போய்விட வாய்ப்புள்ளது என்பதை, வர்த்தகர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 24,034, 23,701 மற்றும் 23,500 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 24,560, 24,753 மற்றும் 24,954 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24,227 என்ற அளவிற்கு கீழே செல்லாமல், தொடர்ந்து வர்த்தகமாகி வருவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.