
நாட்டின் மின்தேவை 15 ஜிகாவாட் அதிகரிக்கும்
புதுடில்லி:நாட்டின் மின்சார தேவை, ஆண்டுக்கு 15 ஜிகாவாட் என்ற அளவில் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அதிகரிக்கும் என, மத்திய மின்சாரத் துறை கூடுதல் செயலர் ஸ்ரீகாந்த் நகுலபள்ளி தெரிவித்துள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் மின்சாரத் தேவை ஆண்டுக்கு 11 ஜிகாவாட் அதிகரித்த நிலையில், அடுத்து வரும் ஆண்டுகளில் தலா 4 ஜிகாவாட் அதிகரிக்கும் என்ற அவர், 2030ஆம் ஆண்டு வாக்கில், பேட்டரிகள் வாயிலாக, 40 ஜிகாவாட் வரை மின் இருப்பு ஏற்படுத்தப்படும் என்றார். பெட்ரோல், டீசல் உள்ளிட்ட படிமம் அல்லாத, சூரிய மின்சாரம் உள்ளிட்ட மாற்றுவழி மின்உற்பத்தித் திறனை 500 ஜிகாவாட்டாக அதிகரிக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறினார்.
கணக்கு தணிக்கையில்கூடுதல் கவனம் தேவை'
மும்பை:இன்றைய சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எதிர்காலத்தில் பெரிதாக விரிவடைய வாய்ப்புள்ளதால், அவற்றின் கணக்குகளை கூடுதல் கவனத்துடன் தணிக்கை செய்யுமாறு, பட்டய கணக்காளர்களை செபி கேட்டுக் கொண்டுள்ளது.
மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் செபி முழுநேர உறுப்பினர் அஷ்வனி பாட்டியா பேசுகையில், சிறு தொழில் நிறுவனங்கள் புதிய பங்குகளை வெளியிட்டு நிதி திரட்டுவது அதிகரித்தி இருப்பதாகவும்; அவை எதிர்காலத்தில் பெரிய நிறுவனங்களாகலாம் என்பதால், அவற்றின் நிதி திரட்டும் நடவடிக்கைகளை கவனத்துடன் பரிசீலிக்க வேண்டும் என்றார். சிறுதொழில் பிரிவில் உள்ள நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில் 6,000 கோடி நிதி திரட்டியதாகவும்; அவற்றின் நிதி ஆரோக்கியத்தை கையாளும் மருத்துவர்களாக பட்டய கணக்காளர்கள் திகழ்வதாகவும் பாட்டியா கூறினார்.

