sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள்: 'ஒன் டைம் செட்டில்மென்ட்' சிக்கலிலிருந்து எப்படி வெளிவருவது?

/

ஆயிரம் சந்தேகங்கள்: 'ஒன் டைம் செட்டில்மென்ட்' சிக்கலிலிருந்து எப்படி வெளிவருவது?

ஆயிரம் சந்தேகங்கள்: 'ஒன் டைம் செட்டில்மென்ட்' சிக்கலிலிருந்து எப்படி வெளிவருவது?

ஆயிரம் சந்தேகங்கள்: 'ஒன் டைம் செட்டில்மென்ட்' சிக்கலிலிருந்து எப்படி வெளிவருவது?


ADDED : செப் 01, 2025 01:04 AM

Google News

ADDED : செப் 01, 2025 01:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் 30 ஆண்டுகளாக ஒரு கடையை நடத்தி வருகிறேன். கொரோனாவுக்கு முன்னால் நன்றாக தொழில் நடந்தது. அதன் பிறகு விற்றுமுதல் கணிசமாக குறைந்து விட்டது.தற்போது என் தொழில் நஷ்டத்தில் ஓடுகிறது. இதுவரை வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்து வந்துள்ளேன். இனிமேல் ரிட்டர்ன் தாக்கல் செய்யாமல் இருக்கலாமா? அபராதம் விதிப்பரா?

ஜி.பாலசுப்பிரமணியன், மதுரை. தொழிலில் லாபம் இருந்தால்தான் ரிட்டர்ன் தாக்கல் செய்ய வேண்டும் என்பது இல்லை. உங்கள் நிலையைப் பார்க்கும்போது, வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படாது போலத்தான் தோன்றுகிறது.

இருப்பினும், ரிட்டர்ன் தாக்கல் செய்து, ஒப்புகை சீட்டை வைத்துக்கொள்வது மிக முக்கியம். இது வருங்காலத்தில், கடன், முதலீடு, அரசு திட்டங்கள் போன்றவற்றில் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

முன்பெல்லாம் தேசிய பென்ஷன் திட்டம் பற்றி நிறைய செய்திகள் வரும். நீங்களே கூட எழுதுவீர்கள். ஏன் இப்போது அதைப் பற்றி எழுதுவதில்லை?

தர்மலிங்கம், மின்னஞ்சல். புதிய வரித் திட்டம் அறிமுகமாகும் முன், என்.பி.எஸ்., கணக்கில் செய்யப்படும் 50,000 ரூபாய் வரையான முதலீட்டுக்கு கூடுதல் வரிவிலக்கு கிடைத்தது. அதனால், முன்பு ஏராளமானோர் அதில் சேர்ந்தனர். ஆனால், புதிய வரித் திட்டத்தில், பணியாளர் செலுத்தும் என்.பி.எஸ்., பங்களிப்புக்கு வரிவிலக்கு இல்லை. இதனால், பலர் புதிதாக இந்தத் திட்டத்தில் சேருவதில்லை என்பது தெரிகிறது.

எனினும், என்னைப் பொறுத்தவரை, தனியார் நிறுவனப் பணியாளர்கள், 'கிக்' பணியாளர்கள் போன்ற நிரந்தரப் பணி இல்லாத, எதிர்காலத்தில் ஓய்வூதியம் பெறுவதற்கு வாய்ப்பே இல்லாதோருக்கு, தேசிய பென்ஷன் திட்டமே அருமருந்து. வரிவிலக்கு கிடைப்பது என்பது ஒரு கூடுதல் போனஸ் மட்டுமே. பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய அடிப்படைத் திட்டங்களில் நிச்சயமாக இது ஒன்று.

என் உறவினர் ஒருவர் திடீரென மரணம் அடைந்துவிட்டார். அவரது வங்கிக் கணக்கு, முதலீடுகள், கடன்கள், காப்பீட்டு பாலிசிகள் குறித்து யாருக்கும் எதுவுமே தெரியவில்லை. அவருடைய கணினியையும், ஐபோனையும் திறக்கவே முடியவில்லை. இதுபோன்ற துர்மரணங்களின் விளைவை, நிதி ரீதியாக எப்படி எதிர்கொள்வது?

நரேஷ்குமார், வில்லிவாக்கம். நெருப்பென்றால் வாய் சுட்டுவிடாது. மரணம் தவிர்க்க முடியாதது. அது எப்போது வரும் என்பதையும் கணிக்க முடியாது. ஒரே ஒரு பழக்கத்தை மட்டும் குடும்பத் தலைவர்கள், தலைவியர் பின்பற்ற வேண்டும். வீட்டுக் கணக்கு, முதலீடுகள், கடன்கள் உள்ளிட்ட அத்தனை தகவல்களையும், அனை வருக்கும் தெரியும் வண் ணம் பொதுவில் வைக்க வேண்டும்.

எல்லா மின்னஞ்சல் யூசர் ஐ.டி.,கள், வங்கி கணக்கு எண்கள், ஏ.டி.எம்., அட்டை எண்கள், கிரெடிட் அட்டை எண்கள், டிமேட், மியூச்சுவல் பண்டு எண்கள், இவற்றுக்கான கடவுச் சொற்கள் ஆகிய அனைத்தையும் ஒரு தனிக் கோப்பாக உருவாக்கி, கணினியில் சேமித்து வையுங்கள். அச்சு எடுத்தும் ஒரு பிரதி வையுங்கள். இதில் ரகசியத்துக்கு ஒரு வேலையும் இல்லை.

தங்களுடைய முதலீடுகள் மற்றும் கடன் வாங்கும் முடிவுகள் குடும்பத்துக்குள்ளேயே விமர்சிக்கப்படலாம். அதனால், அதை குடும்ப உறுப்பினர்களுக்குக் கூட தெரியாமல் வைத்துக்கொள்ள வேண்டும் என்று கருதுவோர் உண்டு.

இதெல்லாம் ரொம்ப தப்பு. வெளிப்படையாக இருப்பது தான் எப்போதும் நல்லது.

ஒருசில மருத்துவமனைகள், ரொக்கமில்லா மருத்துவ சேவைகளைத் தர இயலாது என்று சொல்லிவிட்டனவாமே? மருத்துவ காப்பீடு வாங்கியவர்கள் நிலைமை என்ன?

விஜயகோபால், திருப்பூர். வட மாநிலங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளின் கூட்டமைப்பு ஒன்று, இத்தகைய தடையை ஒரு சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மீது விதித்தது. இப்போது பேச்சுநடத்தப்பட்டு, தடை விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், அடிப்படை பிரச்னை தீரப்போவதே இல்லை. தனியார் மருத்துவமனை கட்டணங்கள், செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.

அதற்கேற்ப இன்சூரன்ஸ் நிறுவனங்களும் கூடுதல் தொகையை மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும், அதுவும் விரைந்து வழங்க வேண்டும், ப்ரீ அப்ரூவலையும் விரைந்து செய்ய வேண்டும் என்பவை இந்தக் கூட்டமைப்பின் கோரிக்கை.

அப்படிச் செய்யத் தவறிய இரண்டு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் காப்பீடு பாலிசிகளை தங்கள் மருத்துவமனைகளில் ஏற்க மாட்டோம் என்று தெரிவித்தன. இப்போது ஏதோ சமாதானம் ஆகியிருக்கிறது.

அங்கே சுற்றி, இங்கே சுற்றி, கடைசியில் இது வாடிக்கையாளர் தலையில் தான் வந்து விடியப் போகிறது. மருத்துவ பணவீக்கத்துக்கு ஏற்ப, பாலிசி பிரீமியங்கள் உயர்ந்துகொண்டே போனால், யாரால் அந்தச் சுமையைத் தாங்க முடியும்?

பல மூத்த குடிமக்கள் அமெரிக்க மருத்துவக் கட்டமைப்பின் செலவுகள் தாங்க முடியாமல் தான் இந்தியா வந்து வைத்தியம் பார்த்துக்கொள்கின்றனர். நாமும் இனிமேல் அதுபோல் வேறு நாடு தேடி ஓட வேண்டியது தான் போலிருக்கிறது.

'ஒன் டைம் செட்டில்மென்ட்' பற்றி நீங்கள் சொன்னது ோலவே, என்னால் வேறு ஒரு நிறுவனத்தில் இப்போது வரை எந்த லோனும் வாங்க முடியவில்லை. இதை சரிசெய்ய வேறு என்ன வழி உண்டா?

தினேஷ், வாட்ஸாப். ஒன் டைம் செட்டில்மென்ட் என்பது அவசரத்துக்கு மேற்கொள்ளக்கூடிய தீர்வு தானே தவிர, அதனால் ஏற்படும் நீண்டகால பாதிப்புகள் மிக அதிகம். உங்களுக்கு நடந்திருப்பது அது தான். கடனைத் திருப்பிச் செலுத்தும் உங்களது திறனை குறைத்துத் தான் வங்கிகள் மதிப்பீடு செய்யும். கிரெடிட் ஸ்கோர் என்பது கழுத்தைச் சுற்றிய பாம்பு மாதிரி ஆகிவிட்டது. இதிலிருந்து நிதானமாகத் தான் வெளியே வர வேண்டும்.

கொஞ்ச காலத்துக்கு எந்த வங்கியிலும் கடன் கேட்காதீர்கள். ஒவ்வொரு முறை கடன் கேட்கும்போதும், அவர்கள் சிபில் ஸ்கோர் கவனிப்பர், நிராகரிப்பர். அதனால், உங்கள் ஸ்கோர் மேலும் குறையும்.

இரண்டாவது, எந்த வங்கியில் கடன் வாங்கி ஓ.டி.எஸ். செய்தீர்களோ, அங்கே போய், மீதி தொகையைக் கட்ட வாய்ப்பிருக்கிறதா என்று பாருங்கள். முடிந்தால், கட்டிவிட்டு, 'நோ டியூ' சான்றிதழ் வாங்கி, கிரெடிட் ஸ்கோர் நிறுவனங்களுக்கு அனுப்பி வையுங்கள். உங்களுடைய கடன் நிலை 'செட்டில்டு' என்பதில் இருந்து 'குளோஸ்டு' என்று மாறுவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

மூன்றாவதாக, ஒரு முயற்சி செய்யலாம். வீட்டுக் கடன், ஆபரணக் கடன், அல்லது, வைப்பு நிதிக்கு இணையான பாதுகாப்பான கிரெடிட் கார்டு பெற முடியுமா என்று பாருங்கள். அங்கே முறையாக தவணைத் தொகையைச் செலுத்தி வந்தால், உங்கள் கிரெடிட் ஸ்கோர் உயர வாய்ப்பிருக்கிறது.

இவையெல்லாம் உங்கள் பிரச்னைக்கு உடனடி தீர்வு தராது. ஆனால், 12 - 24 மாதங்களில் சீராகக் கடன் செலுத்தும் பழக்கம் வளர்த்தால், உங்கள் சிபில் ஸ்கோர் மீண்டும் உயரக்கூடும்.

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்






      Dinamalar
      Follow us