sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பங்கு வர்த்தகம்

/

ஆயிரம் சந்தேகங்கள் : டெரிவேட்டிவ் முதலீடு யாருக்கு பொருந்தும்?

/

ஆயிரம் சந்தேகங்கள் : டெரிவேட்டிவ் முதலீடு யாருக்கு பொருந்தும்?

ஆயிரம் சந்தேகங்கள் : டெரிவேட்டிவ் முதலீடு யாருக்கு பொருந்தும்?

ஆயிரம் சந்தேகங்கள் : டெரிவேட்டிவ் முதலீடு யாருக்கு பொருந்தும்?


ADDED : டிச 29, 2025 02:12 AM

Google News

ADDED : டிச 29, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 1993ல் நான் காரமடையில் இருந்த ஸ்ரீராமகிருஷ்ணா ஸ்டீல் நிறுவனத்தில் பங்குகளை வாங்கியிருந்தேன். பின்னர் மறந்தே போனேன். இப்போது அந்த நிறுவனம் உள்ளதா? என் பங்குகளுக்கான பணத்தை பெற முடியுமா?

- கி.பாக்கியம், கோவை

துரதிர்ஷ்டவசமாக அந்த நிறுவனம் பல ஆண்டுகளுக்கு முன் னரே நலிவடைந்து, உற்பத்தியை நிறுத்திவிட்டது. ஒரு நிறுவனம் திவாலாகி மூடப்படும் சூழல் உருவானால், அதன் சொத்துக்களை விற்று, முதலில் வங்கி கடன்களே அடைக்கப்படும். சாதாரண பங்குதாரர்களுக்கு பணம் திரும்ப கிடைப்பது மிகவும் அரிது.

இருப்பினும், உங்கள் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று, முதலீட்டாளர்கள் கல்வி, பாதுகாப்பு நிதியத்தின் www.iepf.gov.in தளத்தில் உங்கள் பெயரை தேடிப் பாருங்கள். ஏதேனும் 'டிவிடெண்ட்' நிலுவை இருந்தால் அங்கே தெரியும். இரண்டு, www.mca.gov.in தளத்தில் அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலை என்ன என்று பார்க்கலாம்.

பங்குகளில் முதலீடு செய்வது என்பது, ஒரு செடியை நட்டு வைப்பது போன்றது. நட்டு விட்டு தண்ணீர் ஊற்றாமல் விட்டால் செடி வாடிவிடும். அதுபோல, முதலீடு செய்த நிறுவனத்தை அவ்வப்போது கண்காணிக்க வேண்டும்.

ஷேர் மார்க்கெட்டில் டெரிவேட்டிவ்களில் 98 சதவீதம் பேர் நஷ்டம் அடைகின்றனர். அது சாதாரண பொது மக்களுக்கானது அல்ல. அதில் தலையிடாமல் இருப்பது நல்லது என்று மூன்று மாதங்களுக்கு முன்னர் அரசு பகிரங்கமாக அறிவித்து இருந்தது. அதில், மக்கள் எப்படி பணத்தை இழக்கின்றனர்; எங்கே தவறு செய்கின்றனர்?

- சந்துரு, சேலம்

நீங்கள் சொல்வது நுாற்றுக்கு நுாறு உண்மை. 'செபி' வெளியிட்ட ஆய்வறிக்கை இதை உறுதிப்படுத்தியுள்ளது. மக்கள் இதில் பணத்தை இழக்க மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

இப்போது, 60 சதவீத வர்த்தகம் அதிவேக கணினிகள் மற்றும் அல்காரிதம்கள் வாயிலாகவே நடக்கின்றன. இதற்கு, 'ஆல்கோ டிரேடிங்' என்று பெயர். கண் இமைக்கும் நேரத்தில் அவை முடிவெடுக்கும். மனித மூளையால் அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது.

அடுத்தது, கையில் 10,000 இருந்தால், 5 லட்சம் ரூபாய் வரை வர்த்தகம் செய்ய அனுமதிப்பர். லாபம் வந்தால் மகிழ்ச்சி; ஆனால், சந்தை சற்று திரும்பினாலும், வைத்திருந்த மொத்த பணமும் நிமிடங்களில் காலியாகிவிடும்.

மூன்றாவது, பங்குகளை வாங்கி போட்டுவிட்டு, 'விலை ஏறும்போது விற்கலாம்' என்று இதில் காத்திருக்க முடியாது. குறிப்பிட்ட தேதிக்குள் விற்றாக வேண்டும். நேரம் செல்ல செல்ல, ஆப்ஷன்களின் மதிப்பு பனிக்கட்டி போல கரைந்துவிடும்.

தவிர, இதில் சிறு லாபம் கிடைத்தாலும், அது தரகு கட்டணம் மற்றும் வரிகளுக்கே சரியாக போய் விடுகிறது. சுருக்கமாக சொன்னால், இது 'சிறு மீன்கள் (மக்கள்), திமிங்கிலங்களுடன் (நிறுவனங்கள்) மோதும் களம்!' இதில், சிறு மீன்கள் ஜெயிக்க வாய்ப்பே இல்லை. எனவே, இதில் இருந்து விலகி இருப்பதே புத்திசாலித்தனம்.

தங்கம் விலை ஏன் நிற்காமல் ஏறுகிறது ? 1 சவரன் 5 லட்சம் ரூபாயை தொடுமா?

- வி.ராம்குமார், வாட்ஸாப்

அடுத்த ஆண்டு, அமெரிக்காவில் இரண்டு முறை வட்டி குறைப்பு இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனால், அங்கே செய்யப்படும் பங்கு பத்திர முதலீடுகளின் வருவாய் கணிசமாக குறையும். இதை சமாளிக்க பெரு முதலீட்டாளர்கள், தங்கத்தை வாங்கி குவிக்கின்றனர்.

பல பெரிய நாடுகள், பொருளாதார மந்தநிலையோ, சரிவோ ஏற்படுமானால், அதை தாங்கிக் கொள்வதற்கு ஏதுவாக பெருமளவு தங்கத்தில் முதலீடு செய்கின்றன.

சர்வதேச பொருளாதாரத்தில் நிலவும் நிலையற்ற தன்மை என்று தணிகிறதோ அதுவரை, தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடரவே செய்யும்.

உலக தங்க கவுன்சிலின் அனுமானத்தின் படி, இன்றைக்கு இருக்கும் நிச்சயமற்ற தன்மை அப்படியே தொடரும் பட்சத்தில், தங்கத்தின் விலை மேலும் 15 முதல் 30 சதவீதம் உயரக்கூடும்.

ஒருவேளை டொனால்டு டிரம்ப் மேற்கொண்டு வரும் சீர்திருத்தங்கள் பலன் அளிக்க துவங்கி, அமெரிக்க பணவீக்கம் கட்டுப்பட்டு, டாலர் மதிப்பு நிலை பெறுமானால், தங்கத்தின் விலை 5 முதல் 20 சதவீதம் வரை சரியக்கூடும். சர்வம் அமெரிக்கார்ப்பணம்!

அடகு வைத்த தங்கத்தை, முழு பணமாக ஒரே முறை செலுத்தி தான் மீட்க வேண்டும் என்று வங்கியில் சொல்கின்றனரே. இந்த நடைமுறையை மத்திய அரசு திரும்ப பெற்றுவிட்டது அல்லவா? மீண்டும் அதையே ஏன் வலியுறுத்துகின்றனர்?

- அசோக், செங்கல்பட்டு



மத்திய அரசு அப்படியொரு உத்தரவு எதையும் பிறப்பிக்கவில்லை. இது, வங்கியின் அடிப்படை நடைமுறை சார்ந்த விஷயம்.

பொதுவாக, நாம் பல நகைகளை ஒன்றாக கொடுத்து, ஒரே கடன் கணக்கின் கீழ் பணம் பெற்றிருப்போம்.

அப்படி செய்யும்போது, அந்த முழு கடனுக்கும் இந்த மொத்த நகைகளும் பிணையாக இருக்கும். எனவே, முழு கடனையும் அடைத்தால் தான், அந்த 'லோன் கணக்கு' முடிவுக்கு வரும்; நகைகள் விடுவிக்கப்படும். முன்பு மாதிரி, 'எவர் கிரீன்' செய்ய முடியாது.

அடுத்த முறை நீங்கள் நகைக்கடன் பெறும்போது, மொத்த நகையையும் ஒரே கணக்கில் வைக்காமல், 'தனித்தனி லோனாக' போடுங்கள். உதாரணமாக, ஐந்து சங்கிலிகள் உள்ளன என்றால், ஐந்து தனித்தனி ரசீதுகளில் கடன் வாங்குங்கள்.

இப்படி செய்தால், பணம் கிடைக்கும்போதெல்லாம் ஒவ்வொரு கடனாக அடைத்து, ஒவ்வொரு நகையாக மீட்டுக் கொள்ளலாம்.

போர்ட்போலியோ என்றால் என்ன? விளக்கமாக பதிலளிக்கவும்.

- வனிதா, வாட்ஸாப்

மிக எளிதாக சொல்ல வேண்டும் என்றால், 'முதலீட்டு கலவை' அல்லது 'முதலீட்டு தொகுப்பு' என்பது தான் போர்ட்போலியோ. 'எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காதே' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. அதுதான் போர்ட்போலியோவின் அடிப்படை விதி.

தங்கம், ரியல் எஸ்டேட், பங்குகள், கடன் பத்திரங்கள், வங்கி டிபாசிட் என பல்வேறு திட்டங்களில் பணத்தை பிரித்து முதலீடு செய்த முதலீட்டு தொகுப்பு, போர்ட்போலியோ.

இப்படி செய்வதன் வாயிலாக, ஒரு துறையில் நஷ்டம் ஏற்பட்டாலும், மற்றொன்றில் வரும் லாபம் அதை ஈடுகட்டிவிடும். இது, உங்கள் பணத்துக்கு பாதுகாப்பை அதிகரிக்கும்.

ஒரு நல்ல போர்ட்போலியோவை எப்படி அமைப்பது? உதாரணத்துக்கு, 50 சதவீதம் பங்குகள், 30 சதவீதம் கடன் பத்திரங்கள், 10 சதவீதம் தங்கம், 10 சதவீதம் வங்கி டிபாசிட் என பிரித்துக் கொள்ளலாம். பங்குகளில் கூட, ஒரே நிறுவனத்தில் போடாமல், லார்ஜ் கேப், மிட் கேப், ஸ்மால் கேப் என பிரித்து போடலாம்.

சுருக்கமாக சொன்னால், உங்கள் எதிர்கால இலக்கு, வயது மற்றும் ரிஸ்க் எடுக்கும் திறனுக்கு ஏற்ப, சரியான விகிதத்தில் பணத்தை பிரித்து முதலீடு செய்வதே, 'போர்ட்போலியோ!'

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸாப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014 என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளை சுருக்கமாக தமிழில் கேட்கவும்.

ஆர்.வெங்கடேஷ்






      Dinamalar
      Follow us