/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ரிலையன்சுக்கு புதுமையான 'கண்டிஷன்' போடும் இளைஞர்
/
ரிலையன்சுக்கு புதுமையான 'கண்டிஷன்' போடும் இளைஞர்
ADDED : அக் 24, 2024 11:02 PM

புதுடில்லி:தன் உயர்கல்வி கனவை நிறைவேற்றிக் கொள்வதற்காக, இளைஞர் ஒருவர், 'ரிலையன்ஸ்' நிறுவனத்துக்கு கண்டிஷனுடன் கூடிய புதுமையான கோரிக்கை ஒன்றை முன்வைத்து உள்ளார்.
'டிஸ்னி ஹாட்ஸ்டார்' நிறுவனமும் 'ஜியோ சினிமா' நிறுவனமும் இணைந்து, நாட்டின் மிகப்பெரிய ஓ.டி.டி., தளமாக உருவெடுக்க உள்ளது.
ஏற்கெனவே 'சாவன் டாட் காம்' என்ற இசை செயலியை கையகப்படுத்திய ஜியோ, அதன் பெயரை, 'ஜியோ சாவன்' என மாற்றியது.
அதைப்போல, டிஸ்னியை கையகப்படுத்தும் நடைமுறைக்குப் பிறகு, 'ஜியோ ஹாட்ஸ்டார்' என பெயரிட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. இதை பயன்படுத்திக் கொள்ள எண்ணிய பொறியாளர் ஒருவர், அந்த பெயரை முன்கூட்டியே பதிவு செய்து வைத்துள்ளார்.
அந்த இணைய தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கேம்பிரிட்ஜ் பல்கலையில் உயர்படிப்பு படிப்பதே தனது கனவு என்றும், டிஸ்னி, ஜியோ இணைப்பு குறித்த பேச்சு தொடங்கியதும், அந்நிறுவன எதிர்கால பெயரை யூகித்து, 'ஜியோ ஹாட்ஸ்டார்' என்ற இணையதளத்தை பதிவு செய்து வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதற்காக ஒரு பெரும் தொகையையும் அவர் கோரியுள்ளார்.
'ரிலையன்ஸ் போன்ற பெருநிறுவனத்துக்கு, ஒரு இணையதள உரிமையை வாங்குவது பெரிய செலவாக இருக்காது.
ஆனால், கேம்பிரிட்ஜ் பல்கலையில் படிக்கத் தேவையான பணம் என்னை பொறுத்தவரை ஒரு பெரும்தொகையாகும். எனவே அந்த பெரிய தொகையை கோரியுள்ளேன்' என்றும் அவர் பதிவிட்டுஉள்ளார்.
இதையடுத்து, இளைஞர் கேட்கும் தொகையைக் கொடுத்து, ஜியோ ஹாட்ஸ்டார் இணையதளத்தை ரிலையன்ஸ் வாங்குமா; அல்லது, இளைஞரின் கேம்பிரிட்ஜ் கனவு, கனவாகவே இருக்கும் வகையில் வேறு பெயர் வைக்கப்படுமா என்பது விரைவில் தெரியும்.

