/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பொது பங்கு வெளியீட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
/
பொது பங்கு வெளியீட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
ADDED : செப் 23, 2024 01:40 AM

பங்கு முதலீட்டை விட ஐ.பி.ஓ., எனப்படும் பொது பங்கு வெளியீடுகளை சில்லரை முதலீட்டாளர்கள் மேலும் கவனமாக அணுகுவது அவசியம்.
சில்லரை முதலீட்டாளர்கள் அணுகுமுறை தொடர்பாக அண்மையில் வெளியான புள்ளிவிபரங்கள் சிந்திக்க வைப்பதாக அமைகின்றன.
நிறுவனங்கள் சந்தையில் நுழையும் போது வழங்கும் ஐ.பி.ஓ., எனப்படும் பொது பங்கு வெளியீடுகளில் பங்கேற்கும் சில்லரை முதலீட்டாளர்கள், 50 சதவீதத்திற்கும் மேலான பங்குகளை அவை ஒதுக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் விற்று வெளியேறி விடுவதாக, பங்குச்சந்தை கட்டுப்பாடு அமைப்பு செபியின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
உடனடி லாபம்
பொது பங்கு வெளியீட்டில் பெற்ற பங்குகளை முதலீட்டாளர்கள் உடனடியாக விற்பது, அவர்களின் குறுகிய கால அணுகுமுறையை உணர்த்துவதாக வல்லுனர்கள் கருதுகின்றனர். இந்த குறுகிய கால அணுகுமுறைக்கு பல்வேறு அம்சங்கள் காரணம் ஆகின்றன.
சில்லரை முதலீட்டாளர்கள் பெரும்பாலும், பங்கு வெளியீடுகளை முழுமையாக அலசி ஆராய்வதற்கான போதிய திறன்களோ அல்லது அதற்கான நேரமோ இல்லாதவர்களாக இருக்கின்றனர். முழு நம்பிக்கை இல்லாமல், உடனடி லாபம் உள்ளிட்டவற்றை எதிர்பார்த்து முதலீடு செய்யும் போது, அந்த பங்குகளை நீண்ட கால நோக்கில் வைத்திருப்பது சிக்கலாகிறது என்கின்றனர்.
பெரும்பாலும், பங்கு தொடர்பான சரியான புரிதல் இல்லாமல், பட்டியலிடப்படும் போதுகிடைக்கும் ஆதாயத்திற்காக பலரும் பங்கு வெளியீட்டை வாங்குகின்றனர். ஒரு சில பங்குகள் பட்டியலிடப்பட்ட பின், அவற்றின் விலையை விட அதிக விலையில் வர்த்தகம் ஆகலாம். அப்போது விற்று வெளியேறினால் லாபம் கிடைக்கலாம்.
ஆனால், எல்லா வெளியீடுகளும் இப்படி ஏறுமுகம் காண்பதில்லை. ஒரு சில வெளியீடுகள் அதிக விலையில் வெளியாகி, பின்னர் அவற்றில் இருந்து குறைவதுண்டு. அப்போது மேலும் நஷ்டத்தை தவிர்ப்பதற்காக பங்குகளை விற்று விடுகின்றனர்.
இடர் அம்சங்கள்
குறுகிய கால நோக்கத்துடன் பொது பங்கு வெளியீட்டில் பங்கேற்பது பல்வேறு இடர்களை கொண்டது. எல்லா பங்கு வெளியீடு களும் அதிக விலையில் வர்த்தகமாகும் என்று உறுதி இல்லை. எதிர்பாராத காரணங்கள் தாக்கம் செலுத்தலாம். மேலும் ஓராண்டுக்குள் பங்குகளை விற்பதில் ஆதாய வரியின் தாக்கமும் இருக்கிறது.
எனவே, பங்கு வெளியீட்டில் பங்கேற்பதாக இருந்தால், நீண்ட கால நோக்கம் இருப்பது நல்லது என்கின்றனர்.
மூன்று முதல் ஐந்து ஆண்டு கால அளவில் முதலீடு செய்தால், பங்குகளின் செயல்பாட்டை கவனித்து தீர்மானிக்கலாம். பங்கு முதலீடே இடர் மிக்கவை என்றாலும், பொது வெளியீடுகள் ஏற்கனவே பட்டியலிடப்பட்ட பங்குகளை விட கூடுதல் இடர் கொண்டவை. புதியவை என்பதால், இவற்றை அலசி ஆராய போதுமான வரலாற்று தகவல்கள் இருக்காது.
மேலும் நிறுவனங்கள் வலுவான நிலையில் இருக்கும் போது பங்கு வெளியீட்டிற்கு தயாராகும். இதனால், நிறுவனத்தின் செயல்பாட்டு உச்சத்தில் முதலீட்டாளர்கள் நுழைய நேரலாம். தொடர்ந்து அதே அளவு செயல்பாட்டிற்கு உறுதி இல்லை.
நிறுவன உரிமையாளர்கள், நிதி கழக முதலீட்டாளர்கள் பங்கு வெளியீட்டின் போது தங்கள் வசம் உள்ள பங்குகளை முழுதும் அல்லது பகுதி அளவு விற்கலாம். இவற்றை வாங்கும் முதலீட்டாளர்களுக்கு, விற்பவர்களுக்கு தெரிந்த அளவு தகவல்கள் கிடைக்க வாய்ப்பில்லை. இந்த அம்சங்களை எல்லாம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும்.