
மின்சார முன்பேர ஒப்பந்தம்
தேசிய பங்கு சந்தையில், மின்சார முன்பேர மாதாந்திர ஒப்பந்தம் நேற்று அறிமுகமானது. முதல் நாள் வர்த்தகத்தின் போது, மெகாவாட் விலை 4,430 ரூபாய்க்கு ஆரம்பமானது. நேற்றைய வர்த்தகத்தின் போது, சராசரியாக 4,368 ரூபாய்க்கு விற்பனையானது. கிட்டத்தட்ட 2 கோடிக்கும் அதிகமான யூனிட்கள் வர்த்தகமாகின. இதன் வாயிலாக மொத்த பரிவர்த்தனை மதிப்பு 87.36 கோடி ரூபாயை தாண்டியது.
==
ஐரோப்பாவில் ஹீரோ மோட்டோகார்ப்
நடப்பு நிதியாண்டில் இரண்டாவது காலாண்டில் ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் சந்தைகளில் நுழைய திட்டமிட்டு இருப்பதாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் தெரிவித்து உள்ளார். மேலும், புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில், தொழில்முனைவோருக்கு வழிகாட்டி, மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களான ஏதர் எனர்ஜி மற்றும் யூலர் மோட்டார்ஸ் நிறுவனங்களின் முதலீடு செய்வதாக அவர் தெரிவித்து உள்ளார்.
==
வரிவிதிப்பால் இந்தியாவுக்கு சாதகம்
சீனா, கனடா, மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு, அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிக வரி விதித்திருப்பது, இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு விலை அடிப்படையில், அதிக வாய்ப்புகளை அளிக்கும் என நிடி ஆயோக் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட 1.95 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க சந்தையில், மொத்தமுள்ள முன்னணி 30 பிரிவுகளில், 22 பிரிவுகள் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
==
ஏலமின்றி சொத்து விற்பனை
பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., மற்றும் ஐ.டி.ஐ., சொத்துக்களை ஏலம் இன்றி அரசு துறைகள், நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் புதிய நடைமுறைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. இதன்படி, 10 கோடி ரூபாய்க்கும் குறைந்த மதிப்பிலான சொத்துக்கள் எனில், பி.எஸ்.எல்.என் நிறுவனமே விலை நிர்ணயம் செய்யலாம். 10 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்கள் எனில், மத்திய பொதுப்பணித் துறையும், 100 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான சொத்துக்கள் எனில், தேசிய நிலப் பணமாக்கல் கழகமும் மதிப்பை நிர்ணயிக்கலாம்.