ADDED : டிச 18, 2024 09:43 PM

மும்பை:புதிய பங்கு வெளியீடு வாயிலாக, 'வென்டிவ் ஹாஸ்பிட்டாலிட்டி' மற்றும் 'கராரோ இந்தியா' நிறுவனங்கள், முதலீட்டை திரட்ட உள்ளன.
வென்டிவ் ஹாஸ்பிட்டாலிட்டி
மஹாராஷ்டிராவின் புனேவை தலைமையிடமாகக் கொண்ட வென்டிவ் ஹாஸ்பிட்டாலிட்டி குழுமம், புனே, பெங்களூரு வாரணாசி மற்றும் இலங்கை, மாலத்தீவில் 'மேரியோட், ஹில்ட்டன், மைனர், அட்மோஸ்பியர்' உள்ளிட்ட பல ஆடம்பர சொகுசு ஹோட்டல்களை குத்தகைக்கு வழங்கி வருகிறது.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 1,600 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட முடிவு செய்துள்ளது. முதலீட்டாளர்கள், நாளை முதல் 24ம் தேதி வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 610 -- 643 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. குறைந்தபட்சம் 23 பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ஐ.பி.ஓ.,வாயிலாக திரட்டப்படும் தொகையை, கடன்களை திருப்பி செலுத்த பயன்படுத்த உள்ளது.
கராரோ இந்தியா
இந்தியாவில் 1997ம் ஆண்டு முதல் கட்டுமான இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் கியர்கள் உள்ளிட்ட உதிரிபாகங்கள், டிராக்டர்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கராரோ இந்தியா, புதிய பங்கு வெளியீடு வாயிலாக 1,250 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட முன் வந்துள்ளது.
இந்நிறுவனத்துக்கு சொந்தமாக புனேவில் இரண்டு தயாரிப்பு ஆலைகள் உள்ளன. நாளை முதல்- 24ம் தேதி வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். ஒரு பங்கின் விலை 668 - 772 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்சம், 21 பங்குகளுக்கு விண்ணப்பிக்கலாம். டிச.,30ம் தேதி, இந்நிறுவன பங்குகள் சந்தையில் பட்டியலிடப்பட உள்ளன.