ADDED : ஜூன் 17, 2026 03:12 AM

அதானி போர்ட்ஸ்
அதானி போர்ட்ஸ் நிறுவனம், அமெரிக்க மென்பொருள் நிறுவனமான 'கலெரிஸ்' உடனான தனது கூட்டணியை விரிவுபடுத்தியுள்ளது. அத்துடன், துறைமுக செயல்பாடுகளை ஏ.ஐ., வாயிலாக தானியங்கி மயமாக்க, இந்நிறுவனம் கிட்டத்தட்ட 945 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இது, துறைமுகத்தின் செயல்திறனை பலமடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிப்ட் சிட்டி
சர்வதேச முதலீட்டு சேவைகளை வழங்க 'ஜீரோதா, குரோ, அப்ஸ்டாக்ஸ்' போன்ற முன்னணி பங்கு தரகு நிறுவனங்களுக்கு குஜராத் கிப்ட் சிட்டி அனுமதி அளித்துள்ளது. ஒழுங்குமுறை அமைப்புகளின் ஒப்புதல்கள் கிடைத்தவுடன், அடுத்த 2 - 3 மாதங்களுக்குள் இந்திய முதலீட்டாளர்களுக்கான இந்த சர்வதேச முதலீட்டு சேவை அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட உள்ளது.
ஐ.ஆர்.இ.எல்.,
அரிய வகை தாதுக்களுக்காக நம் நாடு சீனாவை சார்ந்திருக்கும் நிலையை குறைக்க, பொதுத்துறை நிறுவனமான ஐ.ஆர்.இ.எல்., முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவின் 'ராஸ்நெப்ட்' நிறுவனத்திற்கு சொந்தமான சைபீரிய சுரங்கத்தில் இருந்து அரிய வகை தாது மாதிரிகளை பெற இந்தியா பேச்சு நடத்தி வருகிறது.
புரோடீரியல்
ஜப்பான் நாட்டின் 'புரோடீரியல்' நிறுவனம், ஆந்திர பிரதேசத்தில் அரிய வகை காந்த தயாரிப்பு ஆலையை அமைக்க, 2,250 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்கள் மற்றும் விண்ட் டர்பைன்களுக்கு தேவையான இந்த காந்தங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பது இந்தியாவின் செமிகண்டக்டர் வினியோக தொடரை வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.
