/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'இந்தியாவில் நுகர்வு கலாசாரம் இன்னும் வளரவில்லை'
/
'இந்தியாவில் நுகர்வு கலாசாரம் இன்னும் வளரவில்லை'
ADDED : அக் 10, 2025 02:36 AM

ஒரு காலத்தில் பட்டி தொட்டியெல்லாம் பரவியிருந்த, 'வெல்வெட்' ஷாம்பூ, இப்போது, 'ரிலையன்ஸ்' கைவண்ணத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ளது. வெல்வெட் பிராண்டை மீண்டும் அறிமுகம் செய்வதற்காக சென்னைக்கு வந்திருந்த, 'ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ்' நிறுவனத்தின் இயக்குநர் டி.கிருஷ்ணகுமார், நம் நாளிதழுக்கு அளித்த பிரத்யேக பேட்டி:
ரிலையன்ஸ் தொடர்ந்து பழைய பிராண்டுகளை புதுப்பித்து வருவது ஏன்?
நம் ஊரில் இருந்த பெரிய பிராண்டுகள் எல்லாம் ஏன் தொடர்ந்து இயங்கவில்லை; பிரபலமாகவில்லை என்ற கேள்வியும், சோகமும் எனக்கு உண்டு.
முகேஷ் அம்பானி என்னை அழைத்து, கன்ஸ்யூமர் பிசினஸுக்கான ஒரு பிரிவை உருவாக்கிக் கொடுக்க சொன்னபோது, அது எனக்கு ஒரு வாய்ப்பாக தோன்றியது.
இந்தியனாக, தமிழனாக இருப்பதில் எனக்கு கர்வம் உண்டு. அதனால், என் சின்ன வயதில் பார்த்த ஏராளமான பிராண்டுகளை ஏன் மீண்டும் புதுப்பிக்கக் கூடாது என்று தோன்றியது.
அப்படி புகழ்பெற்ற பழைய பொருட்களை தேட ஆரம்பித்த போது, நாடெங்கும் பல்வேறு பிராண்டுகள் இப்போது செயலற்று இருப்பது தெரியவந்தது. அந்த நிறுவனங்களை நடத்தியவர்களின் குடும்பங்களோடு பேசி, மீண்டும் அவற்றை இயங்க வைக்கும் முயற்சியை துவங்கினேன்.
அப்படி எவற்றுக்கெல்லாம் புத்துயிர் கொடுத்திருக்கிறீர்கள்?
முதலில், கேம்ப கோலாவை மீண்டும் கொண்டு வந்தேன். பின்னர் டாபிமேன், எஸ்.ஐ.எல்., லோடஸ் சாக்லேட்ஸ், சோஸ்யோ உள்ளிட்ட பல பிராண்டுகளை புதுப்பித்தேன். இப்போது, தமிழகத்தின் புகழ்பெற்ற வெல்வெட் பிராண்டை மீண்டும் அறிமுகம் செய்கிறேன்.
சி.கே.ராஜ்குமார் குடும்பம் தான், 1980களில், 'சாஷே' என்ற ஒன்றை அறிமுகம் செய்து, மிகப்பெரிய புரட்சி செய்தது.
அதனால், அதை மீண்டும் புதுப்பிக்க அந்த குடும்பத்தோடு பேசி, தற்போது, ஷாம்பூ, சோப், கண்டிஷ்னர், ஷவர் ஜெல், பாடி லோஷன், பவுடர் ஆகியவற்றை கொண்டு வந்திருக்கிறோம்.
பழைய பிராண்டை மீட்டெடுக்கும் முயற்சியில், எவையெல்லாம் முக்கிய விஷயங்கள் என கருதுகிறீர்கள்?
பழைய பொருட்களுக்கு என்று ஓர் ஆன்மா இருக்கிறது. அதை அப்படியே வைத்துக்கொண்டு, புதிதாக சேர்க்க வேண்டியவற்றை மட்டும் சேர்க்கிறோம். பெயரும், ஆன்மாவும் பழையது. ஆனால், உடல் புதிது. இதனால், பழைய தலைமுறை மற்றும் இளைய தலைமுறையை சேர்ந்த வாடிக்கையாளர்கள் இத்தகைய அறிமுகங்களை ஏற்றுக்கொள்கின்றனர்.
இன்றைக்கு நுகர்வோர் சந்தையில் பொருட்களின் எண்ணிக்கையிலும் விலையிலும் போட்டி வந்துவிட்டதே, எப்படி சமாளிக்கிறீர்கள்?
நாங்கள் இந்த வணிகத்தை ஆரம்பித்ததில் இருந்து, போட்டிக்கு போவதே இல்லை.
உதாரணமாக, நாங்கள் குளிர்பானம் உற்பத்தி செய்கிறோம். அதை வாடிக்கையாளர்களிடம் கொடுத்து, 'என்ன விலையில் இந்த குளிர்பானத்தை விற்பனை செய்தால், உங்களால் வாங்க முடியும்?' என்று கேட்போம். அவர்கள், '10 ரூபாயில் கொடுத்தால் நிறைய வாங்குவேன். 20 ரூபாய் என்றால் சற்று சிரமப்படுவேன். அதற்கு மேல் இருந்தால், என்னால் வாங்க முடியாது' என்று சொல்கின்றனர் என வைத்துக்கொள்வோம்.
அப்படியானால், அந்த 10 ரூபாயில் எப்படி சிறந்த குளிர்பானத்தை உருவாக்க முடியும் என்று, ஆர் அண்டு டி., துறையிடம் கேட்பேன். அவர்கள் அதற்கு ஏற்ப தயாரித்து தருவர்.
அதாவது, இங்கே வாடிக்கையாளர் என்ன விலையில் ஒரு பொருளை வாங்க முடியும் என்று சொல்கிறாரோ, அதற்கேற்ப தயாரித்துக் கொடுப்பது தான் நடக்கிறது. போட்டிக்காக நாங்கள் விலை வைப்பதில்லை. யாரோ ஒருவர், 20 ரூபாயில் அதே பொருளைக் கொடுக்கிறார் என்பதற்காக நாங்கள் 10 ரூபாயில் தரவில்லை. வாடிக்கையாளருடைய எதிர்பார்ப்பை, விலையிலும் பூர்த்தி செய்கிறோம்.
அமெரிக்காவின் 50 சதவீத வரிவிதிப்பால், வாடிக்கையாளர் சந்தையில் ஒருவித தேக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறதே?
எங்களைப் பொறுத்தவரை அப்படி எதுவும் இல்லை. வாடிக்கையாளர் விரும்பும் பொருளை, சரியான விலையில் கொடுத்தால், அது கண்டிப்பாக விற்பனை ஆகும் என்பது தான் என் நம்பிக்கை.
இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இந்தியாவில் நுகர்வு கலாசாரம் பற்றி பேசுவர். பிற நாடுகளோடு ஒப்பிடும் போது, நம் நுகர்வு மிகவும் குறைவு. ஒரு பொருள் அங்கே, 2 லிட்டர் விற்பனை ஆனால், இங்கே 200 மி.லி., கூட விற்பனை ஆவதில்லை. நம் தனிநபர் வருவாய், ஜி.டி.பி.,க்கு ஏற்ப இன்னும் நுகர்வு இங்கே வளரவில்லை. சரியான விலையில், சரியான பொருட்களை கொடுத்தால், மீண்டும் நுகர்வு இங்கே பெருகும் என்பது தான் எங்கள் பார்வை.