/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இ.டி.எப்., முதலீட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
/
இ.டி.எப்., முதலீட்டில் கவனிக்க வேண்டிய அம்சங்கள்
ADDED : நவ 25, 2024 12:37 AM

சில்லரை முதலீட்டாளர்களும் இ.டி.எப்., முதலீட்டில் ஆர்வம் காட்டத் துவங்கியிருக்கும் நிலையில், இதன் முக்கிய அம்சங்கள் பற்றி ஒரு கண்ணோட்டம்.
மியூச்சுவல் பண்ட் வகைகளில் ஒன்றான, இ.டி.எப்., என குறிப்பிடப்படும் சந்தையில் பரிவர்த்தனை செய்யப்படும் நிதிகளில் முதலீடு அதிகரித்துள்ளது. இந்த வகை நிதிகளில் அக்டோபர் மாதம் 13,441 கோடி நிகர முதலீடு செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாதம் இது 381 கோடி ரூபாயாக மட்டும் இருந்தது.
பொதுவாக, இ.டி.எப்., முதலீடு பென்ஷன் நிதிகள் உள்ளிட்ட நிறுவன முதலீட்டாளர்களால் அதிகம் நாடப்பட்ட நிலையில், அண்மைக் காலமாக சில்லரை முதலீட்டாளர்களும் இதில் ஆர்வம் காட்டத் துவங்கியிருப்பது தெரிய வந்துள்ளது.
பல வகை நிதிகள்
இ.டி.எப்.கள், இண்டெக்ஸ் நிதிகள் போலவே, சந்தை குறியீடு சார்ந்த பல வகை பங்குகளில் முதலீடு செய்வதோடு, தனி பங்கு போல பரிவர்த்தனை செய்யக்கூடியவையாகவும் இருக்கின்றன. இண்டெக்ஸ் நிதிகள் போலவே இவை மந்தமான நிதிகளாக கருதப்படுகின்றன.
இவற்றின் செயல்பாட்டிற்கு என தனியே உத்தி வகுக்கப்படாமல், இவை அடிப்படையாக கொண்டுள்ள சந்தை குறியீட்டின் தன்மைக்கேற்ப அமைகின்றன.
எனவே, சந்தை குறியீட்டின் பலனை பெற வழி செய்கின்றன. எனினும், இண்டெக்ஸ் நிதிகள் மதிப்பு சந்தை வர்த்தக முடிவின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. மாறாக, இ.டி.எப்.,கள், மதிப்பு சந்தை தின வர்த்தக போக்கிற்கு ஏற்ப அமைகிறது. இடையே இவற்றை பங்குகள் போலவே பரிவர்த்தனை செய்ய முடியும்.
முதலீட்டாளர்களை பொருத்தவரை, இ.டி.எப்.,கள், பல வகை பங்குகள் பலனை பெற வழி செய்வதோடு, பங்கு பரிவர்த்தனை போன்ற அனுபவத்தையும் அளிக்கின்றன. மேலும் இவை குறிப்பிட்ட குறியீடு சார்ந்தவை என்பதால், இவற்றின் செலவு விகிதமும் ஒப்பீடு அளவில் மற்ற நிதிகளை விட குறைவானது.
எளிய முதலீடு
தற்போது, சந்தை குறியீடுகள் தவிர, குறிப்பிட்ட துறை, கருப்பொருள் என பல வகையான நிதிகள் இந்த பிரிவில் உள்ளன. தங்கம், வெள்ளி போன்ற உலோகங்கள் சார்ந்த நிதிகளும் இருக்கின்றன. குறிப்பிட்ட நாடு அல்லது நாடுகள் குழு சார்ந்த நிதிகளும் உள்ளன.
குறிப்பிட்ட குறியீடு சார்ந்து இயங்குவதால், குறியீட்டின் போக்கிற்கு ஏற்ப இவற்றின் பலன் அமையும். குறியீட்டை விட நிதி குறைந்த பலனை அளிக்கும் இடர் இந்த முதலீட்டில் கிடையாது. மேலும், சந்தையில் பரிவர்த்தனை செய்யலாம் என்பதால், தின வர்த்தக போக்கின் பலனையும் பெற முயற்சிக்கலாம்.
வழக்கமான மியூச்சுவல் பண்ட்களில் இது சாத்தியமில்லை. இந்த வகை முதலீட்டை மேற்கொள்ள டிமெட் கணக்கு அவசியம். எஸ்.ஐ.பி., எனும் சீரான முறையில் முதலீடு செய்வது கடினமானது.
பல வகை நிதிகள் இருக்கும் நிலையில், முதலீட்டாளர்கள் தங்களுக்கு ஏற்ற நிதியை தேர்வு செய்ய வேண்டும். செலவு விகிதம் ஒரு முக்கிய காரணியாகும். குறியீட்டை பின்தொடர்வதில் ஏற்படும் பிழைகள் குறைவாக இருப்பதும் முக்கியம். நிதியை நிர்வகிக்கும் நிறுவனத்தின் அளவு மற்றும் பணமாக்கல் தன்மையையும் கவனிக்க வேண்டும்.
பெரிய நிறுவனங்கள் எனில், குறியீட்டை கண்காணிப்பதில் போதிய கவனம் செலுத்தக்கூடியவையாக இருப்பதாக கருதப்படுகிறது. முதலீட்டாளர்கள் நீண்ட கால அணுகுமுறை கொண்டிருப்பதும், அடிக்கடி பரிவர்த்தனை செய்வதை தவிர்ப்பதும் ஏற்றதாக கருதப்படுகிறது.