/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஊழியர்களுக்கு உணவு: சுந்தர் பிச்சை விளக்கம்
/
ஊழியர்களுக்கு உணவு: சுந்தர் பிச்சை விளக்கம்
ADDED : அக் 24, 2024 11:52 PM

நியூயார்க்:'கூகுள்' நிறுவனம், அதன் ஊழியர்களுக்கு உணவு வழங்குவது மிகவும் பிரபலமாக பேசப்படும் ஒரு விஷயம். இந்நிலையில், 'ஊழியர்களுக்கு அலுவலகத்தில் உணவு வழங்குவது, அவர்களுக்கான சலுகையல்ல; நிறுவனத்தின் புதுமை கண்டுபிடிப்புகளுக்கான முதலீடு' என, 'கூகுள்' நிறுவன தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.
ஊடக நேர்காணல் ஒன்றில், சுந்தர் பிச்சை கூறியதாவது:
கூகுள் ஊழியர்களுக்கு நிறுவனம் சார்பில் வழங்கப்படும் இலவச உணவு, நிறுவனத்தின் வளர்ச்சியுடன் தொடர்புடையது.
ஊழியர்கள் இடையே ஒருங்கிணைப்பு ஏற்படுத்தவும், உணவருந்தும் வேளையில் நடைபெறும் கருத்துப் பரிமாற்றம் வாயிலாக, படைப்பாற்றலை அதிகரிக்கவும் இது உதவுகிறது.
கடந்த 2004ல் மேலாளராக கூகுளில் பணியில் சேர்ந்ததில் இருந்து இதை நானே கண்கூடாக பார்த்துள்ளேன்.
சந்திக்க திட்டமிடாத பலரையும் உணவகப் பகுதியில், சந்திக்க நேர்ந்து, அவர்களுடன் பேசியபோது நிறுவனத்தின் வளர்ச்சிக்கான பல்வேறு யோசனைகள் கிடைத்தன. சாதாரண சந்திப்பும் கருத்துப் பரிமாற்றமும் மிகப்பெரிய மாற்றத்துக்கு வித்திட்டுள்ளன.
நிறுவனத்தின் பல்வேறு துறைகளில் பணியாற்று வோர் ஒரே இடத்தில் சந்தித்து உணவருந்தும்போது, புதிய வாய்ப்புகள் உருவாக்கம், சந்தேகங்களுக்கு தீர்வு, புதிய யோசனைகள் உருவாகவும்; ஊழியர்களிடையே சிறந்த ஒருங்கிணைப்பு ஏற்படவும் வழியேற்படுகிறது. அது, உணவுக்காக நிறுவனம் செலவிடும் செலவாக இல்லாமலும்; ஊழியர்களுக்கான சலுகையாக இல்லாமலும், புதுமை படைப்புகளுக்கான முதலீடாக பார்க்கப்படுகிறது.
இவ்வாறு சுந்தர் பிச்சை தெரிவித்தார்.