/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
பருத்தி உற்பத்தி திறனை அதிகரிக்க அரசு திட்டம் நிதி ஒதுக்கி பணி துவக்கம்
/
பருத்தி உற்பத்தி திறனை அதிகரிக்க அரசு திட்டம் நிதி ஒதுக்கி பணி துவக்கம்
பருத்தி உற்பத்தி திறனை அதிகரிக்க அரசு திட்டம் நிதி ஒதுக்கி பணி துவக்கம்
பருத்தி உற்பத்தி திறனை அதிகரிக்க அரசு திட்டம் நிதி ஒதுக்கி பணி துவக்கம்
ADDED : டிச 24, 2025 01:11 AM

உடுமலை: நீண்ட இழை பருத்தியின் உற்பத்தி திறனை, சர்வதேச நாடுகளுக்கு இணையாக உயர்த்தும் வகையில், சிறப்பு திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
சர்வதேச அளவில், கடந்த 2024ல், பருத்தி அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளில், 59 லட்சம் மெட்ரிக்., டன்னுடன் இந்தியா முதலிடம் பிடித்தது. ஆனால், நீண்ட இழை உள்ளிட்ட பருத்தி ரகங்களில், உற்பத்தி திறன் பிற நாடுகளை விட நம் நாட்டில் குறைவாகவே உள்ளது.
உதாரணமாக, சீனா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில், ஹெக்டேருக்கு, 1,800 கிலோ வரை பருத்தி மகசூல் பெறப்படுகிறது. சர்வதேச சராசரி, 800 கிலோவாக உள்ள நிலையில், இந்தியாவில், சராசரி மகசூல் 460 கிலோவாக உள்ளது.
சாகுபடி பரப்பு அதிகம் இருந்தும், உற்பத்தி திறன் குறைவாக இருப்பது, உள்நாட்டு தேவையை ஈடு செய்ய தடையாக உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வாக, நீண்ட இழை பருத்தி ரகங்களில் உற்பத்தி திறனை அதிகரிக்க, மத்திய அரசு சிறப்பு திட்டத்தை செயல்படுத்த துவங்கியுள்ளது.
தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கத்தின் கீழ், 2025 - 26ம் ஆண்டில், பருத்தி சாகுபடி செய்யப்படும் பகுதிகளில், தொழில்நுட்ப வழிகாட்டுதல்களை வழங்கி, உற்பத்தி திறனை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, 8 மாநிலங்களுக்கு உட்பட்ட 60 மாவட்டங்களில், 14,800 ஹெக்டேர் பருத்தி சாகுபடி பரப்பு தேர்வு செய்யப்பட்டு, வேளாண் விஞ்ஞானிகள் வாயிலாக, விவசாயிகளுக்கு நேரடியாக தொழில்நுட்ப உதவி வழங்கப்படும்.
இதன் வாயிலாக, பிற நாடுகளை போல உற்பத்தித்திறன் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே மாவட்டங்களில், 11,800 ஹெக்டேரில் விரிவாக்க சேவை திட்டத்தின் கீழ், பருத்தி சாகுபடி பரப்பு அதிகரிக்கப்படும். இத்திட்டம், அப்பகுதியிலுள்ள வேளாண் அறிவியல் மையங்களின் கீழ் செயல்படுத்தப்படும்.
இத்தகைய வழிகாட்டுதல்கள், நாக்பூர் மத்திய பருத்தி ஆராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக, சம்பந்தப்பட்ட வேளாண் துறை உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளது.

