ADDED : ஜூலை 13, 2026 01:21 AM

டவுனு: வாங்க அப்பு, நியூட்ரன். சவுக்கியமா இருக்கீங்களா?
நியூட்ரன்: கிண்டலா?
அப்பு: நலம் விசாரிச்சா தப்புங்களா?
டவுனு: புதன்கிழமை நடந்த சம்பவத்தில ஏதும் சிக்கீட்டிங்களா நியூட்ரன்?
நியூட்ரன்: சிக்காம இருந்தாத்தானே ஆச்சரியம்.
அப்பு: நீங்க அப்படி பெரிய வியாபாரம் பண்ற ஆளில்லையே நியூட்ரன்.
நியூட்ரன்: மதியம் வரை சும்மாத்தான் இருந்தேன். திடீருன்னு ஏதோ தோனுச்சுன்னு களத்துல குதிச்சேன். பின்னியெடுத்தீங்க டவுனு. ஒன்னா ரெண்டா 516 பாயிண்ட்டுல்ல இறக்கிவிட்டுட்டீங்க.
அப்பு: எப்படியோ வியாழன், வெள்ளியில நல்லா நிப்டியை ஏத்தினதால வாராந்திர லெவல்ல 69 புள்ளிகள் இறக்கத்தோட முடிச்சு வச்சுட்டோம்.
நியூட்ரன்: வர்ற வாரத்துல பணவீக்க விகிதம், அன்-எம்ப்ளாயின்மெண்ட் ரேட், பயணியர் வாகன விற்பனை, பேலன்ஸ் ஆப் டிரேட், அன்னிய செலாவணி கையிருப்பு மற்றும் எம்3 பணப்புழக்கம் போன்ற நாட்டின் பொருளாதார தகவல்கள் வெளிவர இருக்குது.
அதேபோல, பணவீக்க விகிதம், ப்ரொடியூசர்ஸ் ப்ரைஸ் இண்டெக்ஸ், சில்லரை விற்பனை நிலவரம், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, பில்டிங் பெர்மிட்கள், மிச்சிகன் கன்ஸ்யுமர் சென்டிமெண்ட் போன்ற அமெரிக்க பொருளாதார தகவல்களும் வெளிவர இருக்குது.
டவுனு: நிப்டிக்கு 23,831 / 23,455 / 23,178 போன்ற லெவல்களிலே வாராந்திர ரீதியிலான சப்போர்ட்டும்; 24,557 / 24,907 / 25,184 லெவல்களிலே வாராந்திர ரீதியிலான ரெசிஸ்டென்ஸும் இருக்குது. இதுல 24,181-தான் சந்தை மேலேயா கீழேயாங்குறதை முடிவு செய்யற முக்கிய திருப்புமுனை லெவலா இருக்கும்.
நியூட்ரன்: நிறைய நிறுவனங்களோட காலாண்டு முடிவுகளும் வெளிவர இருக்குது. அப்படியே வர்ற வாரம் எப்படியிருக்குமுன்னு நீங்களே சொல்லீடுங்க டவுனு.
அப்பு: என்ன ஒரு பயம் பாருங்க நியூட்ரனுக்கு!
நியூட்ரன்: வேறெந்த செய்தியுன்னாலும் கவலைப்படாம இருக்கலாம். ஆனா, போர் போன்ற செய்திகள் வந்தா டெக்னிக்கலையெல்லாம் தாண்டி, சந்தை முழுக்க செய்திகளுக்கு ஏத்த மாதிரி நடக்க ஆரம்பிச்சுருது.
டவுனு: ஆமாம். போருங்குறது பாதிப்பு எவ்வளவு துாரம் இருக்குமுன்னு தெரியாத விஷயமாச்சே.
நியூட்ரன்: ஆனா என்னோட பாதிப்பு அன்னன்னைக்கு சாயங்காலமே தெரிஞ்சுடுதே. பேருக்கேத்த மாதிரி நடந்துக்குட்டா பிரச்சினை ஏதும் இருக்காது. உங்க ரெண்டுபேரு மாதிரி நீங்க வேஷம் போட்டா அதனோட பிரதிபலனை அனுபவிச்சுத்தானே ஆகணும்.
அப்பு: கரெக்டா சொன்னீங்க டவுனு.
நியூட்ரன்: அவ்வளவுதான். இனி ரொம்ப நாளைக்கு வேடிக்கைதான் பார்ப்பேன்.
அப்பு: இந்த பிறவியே உங்களுக்கு அதுக்குத்தானே!
டவுனு: சரி விஷயத்துக்கு வாங்க. இந்த வாரம் எப்படியிருக்கும் அப்பு?
நியூட்ரன்: சொல்லவேண்டிய ஆளு கேக்குறாரு பாருங்க.
அப்பு: வாராந்திர அளவுல எனக்கென்னவோ நியூட்ரனுக்கு ஏத்தமாதிரி பெரிய மாறுதல் இல்லாமத்தான் இருக்குமுன்னு தோணுது.
டவுனு: போர் நிலவரம் மோசமாச்சுன்னா?
நியூட்ரன்: மறுபடியும் மைனஸ் 500-தான்!
அப்பு: 500-க்கு மேலே ஒரு நாள் இறங்கினாலும் அடுத்த ரெண்டு நாளில இறங்குனதுல பாதிக்கு மேலே ஏத்தீட்டோமுல்ல.
டவுனு: இங்கதான் நீங்க தப்பு பண்றீங்க. ஏன், கொஞ்சம் ஓவர் கான்பிடன்ஸும் கூட. போர் குறித்த செய்திகளுக்கு சந்தை உடனுக்குடன் ரியாக்ட் செஞ்சுடும். உங்களால உடனுக்குடன் எதிர் நீச்சல் போட முடியாது.
நியூட்ரன்: அப்ப என்னைய மாதிரி வர்த்தகர்கள் என்ன தான் செய்யறது?
டவுனு: போற போக்குல உங்களை மாதிரின்னு சொல்லாதீங்க. வர்த்தகர்கள் என்ன செய்யறதுன்னு கேளுங்க.
நியூட்ரன்: சரி. இப்ப நீங்க சொல்லுங்க டவுனு. வர்ற வாரம் எப்படியிருக்க போகுது?
டவுனு: செய்திகளுக்கு ஏற்றாற்போல் இருக்கும். நாங்க தயாரா இருப்போம். செய்திகள் வந்தா வேலையை காட்டீடுவோம்.
நியூட்ரன்: செய்திகள் இல்லாட்டி?
அப்பு: உடனடியாவெல்லாம் ஏத்தீடமாட்டோம். கொஞ்சம் யோசிச்சுதான் செயல்படுவோம்.
டவுனு: அப்ப என்ன அர்த்தம்?
நியூட்ரன்: பெரிய மாற்றம் இல்லாமத்தான் இந்த வாரம் போகுமுங்கிறீங்க.
டவுனு: சட்டுன்னு கேட்ச் பண்ணீட்டிங்களே நியூட்ரன்! வாங்க உங்களுக்கு பிடிச்ச சாட் ஐட்டம் ஏதாவது சாப்பிடலாம் என்று அழைக்க, மூவரும் கிளம்பினர்.
