/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சரக்கு வணிகம், வருவாயில் இந்திய ரயில்வே சாதனை
/
சரக்கு வணிகம், வருவாயில் இந்திய ரயில்வே சாதனை
ADDED : மார் 17, 2024 01:39 AM

புதுடில்லி:இந்திய ரயில்வே, நடப்பு நிதியாண்டில், அதன் சரக்கு வணிகம் மற்றும் வருவாயில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
கடந்த நிதியாண்டில், அதன் சரக்கு வணிகம் 151.20 கோடி டன்னாக இருந்த நிலையில், நடப்பு நிதியாண்டு முடிவதற்கு உள்ளாகவே 150 கோடி டன்னை எட்டி விட்டது. நிதியாண்டு முடிவில் புதிய உச்சம் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
இந்திய ரயில்வே, மார்ச் 15ம் தேதி நிலவரப்படி, 150 கோடி டன் சரக்கு வணிகத்தை செயல்படுத்தி, அதன் முந்தைய சாதனையை முறியடித்துள்ளது. கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், இது 151.2 கோடி டன்னாக இருந்தது.
நடப்பு நிதியாண்டில், ரயில்வேயின் மொத்த வருவாய் 2.40 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில்  2.23 லட்சம் கோடி ரூபாய் ஈட்டப்பட்டிருந்தது. சரக்கு வணிகத்தின் வாயிலாக, 17,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
இருப்பினும், நடப்பு நிதியாண்டில், ரயில்வேக்கான மொத்த செலவு 2.26 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.
கடந்த நிதியாண்டில், 648 கோடி பயணியர் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இது முந்தைய ஆண்டை விட, 52 கோடி அதிகம்.
உள்கட்டமைப்பு மேம்பாட்டைப் பொறுத்தவரையில், நடப்பு நிதியாண்டில் 5,100 கி.மீ., புதிய தடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதாவது சராசரியாக தினமும் 14 கி.மீட்டருக்கு தடம் அமைக்கப்பட்டு உள்ளது.
நடப்பாண்டு பிப்ரவரியில், சரக்கு கையாளுகை 13.66 கோடி மெட்ரிக் டன் ஆகும். இது, கடந்த ஆண்டு 12.40 கோடி டன்னாக இருந்தது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

