/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது
/
மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நேரம் இது
ADDED : நவ 23, 2024 10:24 PM

கடந்த வாரம்
நாட்டின் தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையை சேர்ந்த நிறுவனங்களின் வளர்ச்சியைக் குறிக்கும், 'எச்.எஸ்.பி.சி., பிளாஷ் கூட்டு பி.எம்.ஐ., குறியீடு' மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு, இம்மாதம் அதிகரித்துள்ளது. சேவைகள் துறையின் வலுவான வளர்ச்சியும்; அதிக பணியமர்த்தல்களும் வளர்ச்சிக்கு வழிவகுத்து உள்ளன
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பை மீட்க, ரிசர்வ் வங்கி அன்னிய செலாவணியை அதிகளவில் விற்றுள்ளது. இதையடுத்து, கடந்த 15ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இதுவரை இல்லாத வகையில் அன்னிய செலாவணி 1.50 லட்சம் கோடி ரூபாய் குறைந்துள்ளது
செப்டம்பர் காலாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி குறையும் என்பதால், நடப்பு நிதியாண்டுக்கான நாட்டின் வளர்ச்சி 6.70 சதவீதமாக குறைய வாய்ப்புள்ளதாக, 'மார்கன் ஸ்டான்லி' நிறுவனம் கணித்துள்ளது
நாட்டின் பங்குச் சந்தைகள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுவதை தொடர்ந்து, அதிக சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்கள், புதிய பங்கு வெளியீடுகளில் முதலீடு செய்வதை கணிசமாக குறைத்துக் கொண்டுள்ளனர். கடைசி 10 ஐ.பி.ஓ.,களில் நான்கில், இவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பிரிவில், முதலீட்டு வரம்புக்கு குறைவாகவே முதலீடு செய்யப்பட்டுள்ளது
நாட்டின் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை, கடந்த செப்டம்பர் காலாண்டில் 6.40 சதவீதமாக குறைந்துள்ளது. இதுவே, கடந்த ஆறு ஆண்டுகளில் மிகவும் குறைந்தபட்சமாகும்.
வரும் வாரம்
'எம்3' பணப்புழக்கம், வங்கிகள் வழங்கிய கடனின் அளவில் வளர்ச்சி, வங்கிகளில் போடப்பட்டுள்ள டிபாசிட்களின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு, உள்நாட்டு கட்டமைப்பு உருவாக்குவதில் கண்ட வளர்ச்சி, ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம் போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
'சிகாகோ பெட்' தேசிய பொருளாதார நடவடிக்கை குறியீடு, 'டல்லாஸ் பெட்' உற்பத்தி குறியீடு, 'எஸ் அண்டு பி கேஸ் ஷில்லர்ஸ்' வீட்டு விலை நிலவரம், சிபி நுகர்வோர் நம்பிக்கை குறியீடு, புதிய வீடுகள் விற்பனை, எப்.ஒ.எம்.சி., மினிட்ஸ், தனிநபர் நுகர்வு குறியீடு, வாடிக்கையாளர் வசம் நீடித்து உழைக்கும் பொருட்களுக்கான ஆர்டர் நிலவரம், தனிநபர் வருமானம், தனிநபர் செலவுகள், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, சிகாகோ கொள்முதல் மேலாளர்கள் குறியீடு போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 78 புள்ளி இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 64 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வியாழனன்று 168 புள்ளிகள் இறக்கத்துடனும்; வெள்ளியன்று 557 புள்ளிகள் ஏற்றத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில், வாராந்திர அடிப்படையில், அதாவது திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில் 374 புள்ளிகள் ஏற்றத்துடன் நிப்டி நிறைவடைந்திருந்தது. கடந்த வாரம் இரண்டு நாட்கள் கணிசமான ஏற்றத்தை சந்தித்தது நிப்டி. இது போன்ற திடீர் திருப்பங்கள் வந்து போகும் சமயங்களில், மிகவும் எச்சரிக்கையுடன் சந்தையை கூர்ந்துநோக்கி செயல்பட வேண்டியிருக்கும்
வரும் வாரத்தில், நவம்பர் மாத எப் அண்டு ஓ., வர்த்தக ஒப்பந்தங்கள் நிறைவடைய இருக்கின்றன. இதன் தாக்கம் மற்றும் செய்திகள், நிகழ்வுகள், உலக பங்கு சந்தைகளில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் போன்றவற்றின் அடிப்படையில், சந்தையின் போக்கில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது.
டெக்னிக்கல் அனாலிசிஸின் அடிப்படையில் பார்த்தால், வரும் வாரத்திலும் நிப்டியில் இறக்கம் வருவதற்கான சூழல் இருப்பதைப் போன்ற தோற்றமே உள்ளது. கடந்த வாரம் வெள்ளியன்று, நிப்டி கண்ட கணிசமானதொரு ஏற்றம் மட்டுமே, இந்த டெக்னிக்கல் நிலைமைக்கு எதிரானதாக இருக்கிறது.
எனவே, வாரத்தின் ஆரம்பத்தில், ஓரிரு நாட்கள் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த கணிப்புகள் சரிவர செயல்படாமல் போவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்பதை, வர்த்தகர்கள் நினைவில் வைத்து, செயல்பட வேண்டியிருக்கும்.
சந்தையின் நகர்வில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய அளவிலான உலகளாவிய செய்திகள், நிகழ்வுகள் போன்றவையே வரும் வாரத்தில் நிப்டியின் நகர்வை தீர்மானிக்கும் விஷயங்களாக இருக்கும்.
இதுபோன்ற ஏற்ற, இறக்கம் நிறைந்த காலகட்டத்தில், வர்த்தகர்கள் தாங்கள் சராசரியாக வர்த்தகம் செய்யும் அளவில், கால் பங்கிற்கும் குறைவான எண்ணிக்கையில், மிகமிக குறுகிய அளவிலான நஷ்டம் குறைக்கும் ஸ்டாப்லாஸ்களை தவறாமல் வைத்துக்கொண்டு, மிகுந்த எச்சரிக்கையுடன் மட்டுமே வர்த்தகம் செய்வது குறித்து சிந்திக்கலாம்.
தொடர்ந்து சந்தையின் நடவடிக்கையின் மீது ஒரு கண் வைத்துக்கொண்டே இருக்க வேண்டியது, வர்த்தகர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயமாகும்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 23,462, 23,016 மற்றும் 22,751 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 24,155, 24,402 மற்றும் 24,666 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும், டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நிப்டியில் ஏற்றம் மீண்டும் உருவாவதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 23,709 என்ற அளவிற்கு கீழே இறங்காமல், தொடர்ந்து அதிக அளவில் வர்த்தகமாகி வருவது மிகவும் அவசியமான ஒன்றாகும்.