/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
மீண்டும் திறக்கப்படும் கோலார் தங்க சுரங்கம்
/
மீண்டும் திறக்கப்படும் கோலார் தங்க சுரங்கம்
ADDED : ஜூன் 16, 2025 10:56 PM

பெங்களூரு :கர்நாடகாவில் உள்ள கே.ஜி.எப்., என பிரபலமாக அழைக்கப்படும் கோலார் தங்க வயலில், விரைவில் தங்கம் உற்பத்தி மீண்டும் துவங்கப்பட உள்ளது.
நாட்டின் விடுதலைக்குப் பின், கிட்டத்தட்ட 80 ஆண்டுகளில் முதல் முறையாக, மூடப்பட்ட தங்கச் சுரங்கம் ஒன்று மீண்டும் திறக்கப்படுவது இதுவே முதல்முறை. வரலாற்றையும், நவீன சுரங்க தொழில்நுட்பத்தையும் ஒருங்கிணைத்து, புகழ்பெற்ற கோலார் தங்க வயல் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட உள்ளது.
'இந்தியாவின் பொன் நகர்' என அழைக்கப்பட்ட கே.ஜி.எப்., 2001ம் ஆண்டு மூடப்பட்ட பின், 24 ஆண்டுகளாக இயங்காமல் உள்ளது.
என்ன நடக்கிறது?
கடந்தாண்டு ஜூன் மாதம், கர்நாடக அமைச்சரவை, பாரத் கோல்டு மைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான 1,003 ஏக்கர் பரப்பளவில் உள்ள சுரங்கக் கழிவுகள் 13 மையங்கள் மீது, மேல்மட்டச் சுரங்க பணிகள் மேற்கொள் வதற்கான மத்திய அரசின் திட்டத்தை ஏற்றது.
இந்த கழிவுகளில் பழைய சுரங்கப் பணிகளின் படிமங்கள் இருந்தாலும், தங்கமும் அதில் உள்ளது.
எவ்வளவு தங்கம்?
கழிவுகளில் சுரங்க படிமங்கள் உட்பட 3.20 கோடி டன் பொருட்கள்
இவற்றிலிருந்து கிட்டத்தட்ட 23 டன் தங்கம் கிடைக்கும்
முழு அளவிலான உற்பத்தி துவங்கியவுடன், ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் கிடைக்கும்.
நவீன சுரங்க முறை
முன்புபோல ஆழமான சுரங்க நடைமுறைகளுக்கு மாறாக, இந்த முறை மேல்மட்டப் படிவங்களை அகற்றுவதில் கவனம் செலுத்தப்பட உள்ளது. நவீன கால தொழில்நுட்பத்தைக் கொண்டு தங்கம் எடுக்கப்பட உள்ளது.
வரலாற்று பின்னணி
கே.ஜி.எப்., சுரங்கங்கள், உலகின் ஆழமான மற்றும் செழிப்பான தங்கச் சுரங்கங்களில் ஒன்றாக இருந்தது. அதிக செலவு மற்றும் குறைந்த லாபம் காரணமாக, கடந்த 2001 பிப்ரவரி 28 அன்று மூடப்பட்டன. தற்போது மீண்டும் திறக்கப்படுவதன் வாயிலாக, பொருளாதார வாய்ப்பாக மட்டுமல்லாமல், இந்திய பாரம்பரியத்தின் மறுமலர்ச்சியாகவும் பார்க்கப்படுகிறது.
அடுத்தது என்ன?
அரசு ஒப்புதலையடுத்து, ஆரம்பக்கட்ட மேல்மட்ட சுரங்க பணிகள் விரைவில் துவங்கும். சுற்றுச்சூழல் மற்றும் செயல்பாட்டு அனுமதிகள் கிடைத்தவுடன், முழு அளவிலான வணிக உற்பத்தி துவங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
என்ன பயன்?
நம்மிடம் உள்ள நவீன பிரித்தெடுத்தல் தொழில்நுட்பங்களைக் கொண்டு, 23 டன் தங்கத்தை எடுப்பதன் வாயிலாக, தங்க உற்பத்தியை அதிகரிப்பதோடு, நாட்டின் பெருமையையும் மீட்டெடுக்க முடியும்.