/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
'மொபிகுவிக்' பங்கு விலை ரூ.279 ஆக நிர்ணயம்
/
'மொபிகுவிக்' பங்கு விலை ரூ.279 ஆக நிர்ணயம்
ADDED : டிச 09, 2024 12:55 AM

புதுடில்லி:'மொபிகுவிக் சிஸ்டம்ஸ்' நிறுவனம் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில் அதன் பங்கு விலையை 279 ரூபாயாக நிர்ணயித்து அறிவித்துள்ளது.
ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்த 'பின்டெக்' நிறுவனமான மொபிகுவிக் சிஸ்டம்ஸ், டிஜிட்டல் பேமன்ட், கடன் மற்றும் முதலீடு, காப்பீடு உள்ளிட்ட பல்வேறு நிதிசேவைகளை, செயலி வாயிலாக வழங்கி வருகிறது. இந்நிறுவனம், ஐ.பி.ஓ.,எனப்படும் புதிய பங்கு வெளியீடு வாயிலாக 572 கோடி ரூபாயை திரட்ட முன்வந்துள்ளது. நிறுவன முதலீட்டாளர்கள் நாளையும், நிறுவனம் சாராத முதலீட்டாளர்கள், வரும் 11 - 13ம் தேதி வரை பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
ஒரு பங்கின் விலை 265 -- 279 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம் 53 பங்குகள் கேட்டு விண்ணப்பிக்கலாம். புதிய பங்குகள் வாயிலாக திரட்டப்படும் தொகையில், 150 கோடி ரூபாயை நிதிசேவை வணிகத்துக்கும், 135 கோடி ரூபாயை பேமன்ட் சேவையை விரிவுபடுத்துவதற்கும் பயன்படுத்த உள்ளதாக தெரிவித்து உள்ளது.
மேலும், 107 கோடி ரூபாயை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பான ஆய்வுக்கும், 70.20 கோடி ரூபாயை பேமன்ட் உபகரணங்கள் வாங்குவதற்கான மூலதன செலவினங்களுக்கும் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து உள்ளது. கடந்த 2021ல் முதல்முறையாக ஐ.பி.ஓ.,வாயிலாக 1,900 கோடி ரூபாய் திரட்ட மொபிகுவிக் நிறுவனம் திட்டமிட்டது. சந்தை நிலவரங்களால், அது கைவிடப்பட்டது.
பின்னர், கடந்த ஜனவரியில் 700 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்ட நிலையில், தற்போது அதனையும் குறைத்து, 572கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளது குறிப்பிடத்தக்கது.