
ஹெக்ஸாவேர்
புதிய பங்கு வெளியீடு வாயிலாக 'ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ்' நிறுவனம் 9,950 கோடி ரூபாய் முதலீட்டை திரட்ட உள்ளது.
மும்பையை தலைமையிடமாக கொண்ட ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ், நிதி நிறுவனங்கள், மருத்துவமனை மற்றும் உற்பத்தி நிறுவனங்களுக்கு, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் கூடிய தகவல் தொழில்நுட்ப தீர்வுகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனம், சி.ஏ., மேக்னம் ஹோல்டிங்ஸ் வசமுள்ள தன் பங்குகளை விற்க திட்டமிட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டில், ஓலா நிறுவனத்துக்கு பின், ஐ.பி.ஓ., வாயிலாக திரட்டப்படும்
அதிகபட்ச தொகை இதுவாகும்.
கென்ட் ஆர்.ஓ.,
குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு உள்ள 'கென்ட் ஆர்.ஓ., சிஸ்டம்ஸ்' புதிய பங்கு வெளியீட்டுக்கு வருகிறது.
உ.பி.,யின் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு, கடந்த 1999ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீடுக்கு அனுமதி கேட்டு, செபியிடம் விண்ணப்பித்து உள்ளது.
இந்நிறுவனத்தின் முதலீட்டாளர்களான சுனிதா குப்தா, மகேஷ் குப்தா மற்றும் வருண் குப்தா ஆகியோர் வசமுள்ள, ஒரு கோடி பங்குகள் ஐ.பி.ஓ., வாயிலாக விற்பனைக்கு வரவுள்ளன. செபி அனுமதி கிடைத்ததும், பங்கு வெளியீடு தேதி, விலை ஆகிய விபரங்கள் வெளியாகும்.
பிற நிறுவனங்கள்
இவை தவிர, பி.எம்.இ.ஏ., சோலார் டெக் சொல்யூசன்ஸ், ஸ்கோடா டியூப்ஸ், அஜாக்ஸ் இன்ஜினியரிங், ஆல்டைம் பிளாஸ்டிக்ஸ், விக்ரன் இன்ஜினியரிங் ஆகிய நிறுவனங்களும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர உள்ளன.
செபி புதிய நடைமுறை
புதிய பங்கு வெளியீடு களில் யூக வணிகத்தை கட்டுப்படுத்தும் வகையில், பட்டியலிடும் முன்பே பங்கு வர்த்தகத்தை துவங்கும் நடைமுறையை அறிமுகம் செய்ய செபி திட்டமிட்டுள்ளதாக, அதன் தலைவர் மாதவி புரி புச் தெரிவித்துள்ளார்.
ஒரு நிறுவனம் வெளியிட்ட ஐ.பி.ஓ.,வின் பங்குகள் பட்டியலிடப்படுவதற்கு முன்பே, 'கிரே மார்க்கெட்' எனப்படும் யூக வணிகத்தில், அதன் பங்குகள் மீது வர்த்தகம் நடைபெறும். இதில் விலை நிலவரத்தைப் பொறுத்து, பட்டியலிடும் போது பங்குகள் ஏற்ற இறக்கத்தை சந்திக்கும்.
இதை கட்டுப்படுத்தி, முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில், புதிய முறையை உருவாக்க செபி பரிசீலித்து வருவதாக மாதவி தெரிவித்துள்ளார்.

