/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
புதிய பங்கு வெளியீடு 4 நிறுவனங்களுக்கு அனுமதி
/
புதிய பங்கு வெளியீடு 4 நிறுவனங்களுக்கு அனுமதி
ADDED : நவ 06, 2024 11:56 PM

புதுடில்லி:புதிய பங்கு வெளியீடு வாயிலாக, கிட்டத்தட்ட 3,000 கோடி ரூபாய் முதலீட்டை திரட்டுவதற்கு, 'ரூபிகான் ரிசர்ச், சாய் லைப் சயின்சஸ், சனாதன் டெக்ஸ்டைல்ஸ், மெடல்மேன் ஆட்டோ' ஆகிய நான்கு நிறுவனங்களுக்கு 'செபி' ஒப்புதல் அளித்துள்ளது.
ரூபிகான் ரிசர்ச்
மஹாராஷ்டிராவைச் சேர்ந்த மருந்து துறை நிறுவனமான இது, புதிய பங்கு வெளியீடு வாயிலாக 500 கோடி ரூபாயும்; 'ஜெனரல் அட்லாண்டிக்' நிறுவனத்தின் வசமுள்ள தன் பங்குகள் விற்பனை வாயிலாக 585 கோடி ரூபாயும் திரட்ட முடிவு செய்துள்ளது.
புதிய பங்கு வெளியீடு வாயிலாக கிடைக்கும் தொகையில், 310 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்தவும், மீதமுள்ள தொகை நிறுவனத்தின் பிற செலவுகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளது.
சாய் லைப் சயின்சஸ்
ஹைதராபாதை சேர்ந்த இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 800 கோடி ரூபாய் திரட்ட உள்ளது. பங்குதாரர்கள் வசமுள்ள 6.15 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.
திரட்டப்படும் தொகையிலிருந்து 600 கோடி ரூபாயை, கடன்களை திருப்பி செலுத்தவும், நிறுவனத்தின் பிற செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
சனாதன் டெக்ஸ்டைல்ஸ்
மும்பையை சேர்ந்த இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீடு வாயிலாக 500 கோடி ரூபாயும், முதலீட்டாளர்கள் பங்கு விற்பனை வாயிலாக 300 கோடி ரூபாயும் திரட்ட உள்ளது.
திரட்டப்படும் தொகையில், 210 கோடி ரூபாய், துணை நிறுவனமான 'சனாதன் பாலி காட்' நிறுவனத்தில் நீண்ட கால மூலதனமாக முதலீடு செய்யவும்; 175 கோடி ரூபாய், கடன்களை திருப்பி செலுத்தவும், நிறுவனத்தின் பிற செலவுகளுக்கும் பயன்படுத்தப்பட உள்ளது.
மெடல்மேன் ஆட்டோ
டில்லியைச் சேர்ந்த வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பாளரான மெடல்மேன் ஆட்டோ, புதிய பங்கு வெளியீட்டு வாயிலாக 350 கோடி ரூபாயை திரட்ட உள்ளது. அத்துடன் பங்குதாரர்கள் வசமுள்ள 1.26 கோடி பங்குகளையும் விற்பனை செய்ய உள்ளது.
புதிய பங்கு வெளியீட்டில் கிடைக்கும் தொகையில், 25 கோடி ரூபாயை மத்திய பிரதேசத்திலுள்ள பீதாம்பூர் ஆலைக்கு இயந்திரம் வாங்க பயன்படுத்த உள்ளது.