/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
அவ்வப்போது வேகமான இறக்கம் வந்து போக வாய்ப்புள்ளது
/
அவ்வப்போது வேகமான இறக்கம் வந்து போக வாய்ப்புள்ளது
ADDED : மார் 17, 2024 01:36 AM

இந்திய மியூச்சுவல் பண்டுகளில், பிப்ரவரி 2024ல் புதிதாக முதலீட்டுக்கென துவங்கப்பட்ட எஸ்.ஐ.பி.,-க்களின் எண்ணிக்கையானது, நிறைவு செய்யப்பட்ட எஸ்.ஐ.பி., கணக்குகளை விட, 2.3 மடங்கு அதிகமாக இருந்தது என்ற செய்தி செவ்வாயன்று வெளியானது
பொது காப்பீடு நிறுவனங்கள், பிப்ரவரி 2024ல் வசூலித்த பிரிமியம் தொகையானது, பிப்ரவரி 2023ல் வசூலிக்கப்பட்டதை விட, 13 சதவீதம் அதிகமாக இருந்தது என்ற செய்தி செவ்வாயன்று வெளியானது
உற்பத்தி செய்த பொருட்களின் ஏற்றுமதியானது பிப்ரவரி 2024ல், 11.90 சதவீதம் அதிகரித்திருந்தது என்றும், இது கடந்த 11 மாதங்களில் இருந்ததை விட அதிக அளவு என்றும் சனிக்கிழமையன்று செய்தி வெளியானது.
வரும் வாரம்
எம்3 பணப்புழக்கம், எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, எச்.எஸ்.பி.சி., சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, வங்கிகள் வழங்கியுள்ள கடன் தொகையின் வளர்ச்சி அளவு, வங்கிகளில் வைக்கப்பட்டுள்ள வைப்புநிதி வளர்ச்சியின் அளவு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
என்.ஏ.எச்.பி., வீடுகள் சந்தை குறியீடு, கட்டடங்கள் கட்டுவதற்கு வழங்கப்பட்ட அனுமதிகளின் எண்ணிக்கை, அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டிவிகித முடிவுகள், எப்.ஓ.எம்.சி.,யின் எதிர்கால பொருளாதாரம் குறித்த கணிப்புகள், வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, எஸ் அண்டு பி., குளோபல் உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, எஸ் அண்டு பி., குளோபல் சேவை நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை போன்ற சில அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்தவாரம் திங்களன்று, வர்த்தக நாளின் இறுதியில் 160 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 3 புள்ளிகள் ஏற்றம்; புதனன்று 338 புள்ளிகள் இறக்கம்; வியாழனன்று 148 புள்ளிகள் ஏற்றம்; மற்றும் வெள்ளியன்று 123 புள்ளிகள் இறக்கம் என்கிற ரீதியிலான ஏற்ற இறக்கங்களை கண்டிருந்தது. கடந்த திங்களன்று வர்த்தக நாளின் இடையே, புதிய வரலாற்று உச்சத்தையும் நிப்டி கண்டிருந்தது
ஏறுவதற்கு தயங்கும் சூழலே டெக்னிக்கல் அனாலிசிஸின் அடிப்படையில் நிலவுகிறது எனலாம். சந்தை சார்ந்த செய்திகள், தரவுகள் மற்றும் நிகழ்வுகள், நிப்டியின் அடுத்த கட்ட பயணத்தை நிர்ணயிக்க வல்லதாக இருக்கும் என்றாலும்; அவ்வப்போது வேகமான இறக்கம் வந்து போகவும் வாய்ப்பு இருக்கவே செய்கிறது.
இவை தவிர, அமெரிக்க பெடரல் ரிசர்வின் வட்டிவிகித முடிவுகளின் தாக்கமும் சந்தையில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது. எனவே, வர்த்தகர்கள் அதிக கவனத்துடன் வர்த்தகம் செய்ய வேண்டும்
வாரத்தின் இறுதியில், டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில், நிப்டியில் ஏறுவதற்கு தயங்கும் சூழல் நிலவுவதைப்போன்ற சமிக்ஞைகளே இருக்கின்றன. கடந்த சில வாரங்களாக, சந்தை கண்டுள்ள ஏற்ற இறக்கங்களை கணக்கில் கொண்டு பார்த்தால், இன்னும் சில நாட்களுக்கு, இந்த வித ஏற்ற இறக்கங்கள் தொடர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதை போன்றே தோன்றுகிறது.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி, 21,777, 21,531 மற்றும் 21,294 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 22,398, 22,773 மற்றும் 23,010 என்ற நிலைகளில், வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது. நிப்டியின் ஏற்றம் தொடர்வதற்கு, தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 22,152 என்ற அளவிற்கு மேலே சென்று, அதற்கு மேலேயே தொடர்ந்து வர்த்தகமாகி வர வேண்டும்.

