/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
சந்தை நகர்வை எப் அண்டு ஓ., ஒப்பந்த நிறைவு தீர்மானிக்க வாய்ப்பு
/
சந்தை நகர்வை எப் அண்டு ஓ., ஒப்பந்த நிறைவு தீர்மானிக்க வாய்ப்பு
சந்தை நகர்வை எப் அண்டு ஓ., ஒப்பந்த நிறைவு தீர்மானிக்க வாய்ப்பு
சந்தை நகர்வை எப் அண்டு ஓ., ஒப்பந்த நிறைவு தீர்மானிக்க வாய்ப்பு
ADDED : அக் 26, 2024 11:11 PM

கடந்த வாரம்
அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள், நடப்பு அக்டோபரில் இதுவரை கிட்டத்தட்ட ஒரு லட்சம் கோடி ரூபாய் முதலீட்டை, இந்திய பங்கு சந்தைகளிலிருந்து திரும்ப பெற்றுள்ளனர். சீன பொருளாதாரக் கொள்கை, இந்திய பங்குகளின் உயர் மதிப்பு, இரண்டாவது காலாண்டில் நிறுவனங்களின் மிதமான வளர்ச்சி, அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்வு ஆகியவை இதற்கு காரணமாக கூறப்படுகின்றன
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7 சதவீதமாக இருக்கும்; அடுத்த நிதியாண்டில் 6.50 சதவீதமாக இருக்கும் என்ற தனது முந்தைய கணிப்பை மாற்றமின்றி தொடர்வதாக, பன்னாட்டு நிதியம் தெரிவித்துள்ளது.
நாட்டின் தயாரிப்பு மற்றும் சேவைகள் துறையின் கூட்டு வளர்ச்சி இம்மாதம் சற்றே அதிகரித்துள்ளதாக, எச்.எஸ்.பி.சி., வங்கி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் 58.30 புள்ளிகளாக இருந்த 'எச்.எஸ்.பி.சி., பிளாஷ்' கூட்டு பி.எம்.ஐ., குறியீடு, இம்மாதம் 58.60 புள்ளிகளாக அதிகரித்துள்ளது
நாட்டின் மியூச்சுவல் பண்டு முதலீட்டாளர்களின் எண்ணிக்கை, கடந்த செப்டம்பர் இறுதியில், 5 கோடியை கடந்துள்ளதாக, இந்திய மியூச்சுவல் பண்டுகள் சங்கம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில் 4 கோடியை கடந்த நிலையில், ஓராண்டில் ஒரு கோடி அதிகரித்துள்ளது
'மஹிந்திரா அண்டு மஹிந்திரா' நிறுவனம், 'ஸ்கோடா ஆட்டோ' இந்தியாவின் 50 சதவீத பங்குகளை வாங்குவது தொடர்பான இருதரப்பு பேச்சு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் சில வாரங்களில், இரு நிறுவனங்களுக்கு இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகும் எனக் கூறப்படுகிறது.
வரும் வாரம்
உள் கட்டுமான அளவில் வளர்ச்சி, எம்3 பணப்புழக்கம், எச்.எஸ்.பி.சி., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, வங்கிகள் வழங்கிய கடன் அளவில் வளர்ச்சி, வங்கிகளில் உள்ள வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி, அன்னிய செலாவணி கையிருப்பு போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
டல்லாஸ் ஃபெட் உற்பத்தி நிறுவனங்கள் குறியீடு, ஜே.ஓ.எல்.டி., உருவான வேலை வாய்ப்புகள், எஸ்&பி/கேஸ்-ஷில்லர் வீட்டு விலைகள், ஜி.டி.பி., வளர்ச்சி விகிதம், கட்டி முடிக்கப்பட்ட வீடுகள் விற்பனை நிலவரம், தனிநபர் வருமானம், தனி நபர் செலவுகள், வேலை இல்லாத நபர்களின் எண்ணிக்கை, சிகாகோ பி.எம்.ஐ., குறியீடு, ஐ.எஸ்.எம்., உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு, எஸ் அண்டு பி., குளோபல் உற்பத்தி நிறுவனங்களின் பி.எம்.ஐ., குறியீடு போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
கடந்த வாரம் திங்களன்று 72 புள்ளி இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 309 புள்ளிகள் இறக்கத்துடனும்; புதனன்று 36 புள்ளிகள் இறக்கத்துடனும்; வியாழனன்று 36 புள்ளிகள் இறக்கத்துடனும்; வெள்ளியன்று வர்த்தக நாளின் இறுதியில் 218 புள்ளிகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில் வாராந்திர அடிப்படையில் (திங்கள் முதல் வெள்ளி வரையிலான ஒட்டுமொத்த அளவீட்டில்) 673 புள்ளிகள் இறக்கத்துடன் நிப்டி நிறைவடைந்திருந்தது
வரும் வாரத்தில் அக்டோபர் மாத எப் அண்டு ஓ., ஒப்பந்தங்கள் நிறைவடைய இருக்கின்றன. வாரத்தின் ஆரம்பத்தில் இதை ஒட்டிய நகர்வுகளே சந்தையில் இருப்பதற்கான வாய்ப்புள்ளது. மேலும் 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் இரண்டாவது காலாண்டு முடிவுகள் வெளிவர இருக்கின்றன. காலாண்டு முடிவுகள் எப்படி இருக்கின்றன என்பதைப் பொறுத்தும் சந்தையின் போக்கில் மாற்றங்கள் நிகழ வாய்ப்புள்ளது. இது தவிர சந்தை சார்ந்த செய்திகள், நிகழ்வுகள் மற்றும் உலக பங்கு சந்தைகளில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் போன்றவையும், வரும் வாரத்தில் இந்திய சந்தையின் நகர்வுகளை தீர்மானிக்கும் காரணிகளாக இருக்க வாய்ப்புள்ளது.
டெக்னிக்கல் அனாலிசிஸ் படி பார்த்தால், நிப்டியில் இறக்கம் தொடர்வதற்கான சூழல் இருப்பதைப் போன்ற நிலைமையே இருக்கின்றது. எப் அண்டு ஓ., ஒப்பந்த நிறைவிற்கான நகர்வுகள், காலாண்டு முடிவுகள், செய்திகள் மற்றும் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உலகளாவிய நிகழ்வுகள் போன்றவையே நிப்டியின் அடுத்த கட்ட நகர்வினை தீர்மானம் செய்யும் காரணிகளாக இருக்க வாய்ப்புள்ளது.
இத்தகைய சூழ்நிலையில், வர்த்தகம் செய்யும் சராசரி அளவில் சரிபாதிக்கும் குறைவான எண்ணிக்கையில், அதிக எச்சரிக்கையுடன், நஷ்டத்தை குறைக்கும் வகையில் ஸ்டாப்லாஸ்களை வைத்துக்கொண்டு மட்டுமே, வர்த்தகர்கள் வர்த்தகம் செய்வது குறித்து பரீசீலனை செய்யலாம்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்
நிப்டி 23,844, 23507 மற்றும் 23,161 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும்; 24748, 25315 மற்றும் 25,661 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24411 என்ற அளவிற்கு மேலே சென்று தொடர்ந்து அதிக அளவில் வர்த்தகமாகிக்கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.