'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மக்கள் அளித்த மனுக்கள்; வைகை ஆற்றில் கிடந்ததால் அதிர்ச்சி
'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் மக்கள் அளித்த மனுக்கள்; வைகை ஆற்றில் கிடந்ததால் அதிர்ச்சி
ADDED : ஆக 29, 2025 01:01 PM

திருப்புவனம்: 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் தாசில்தார், ஆர்ஐ, விஏஓ கையெழுத்துடன் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் மூட்டையாக கட்டி வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் முழுவதும், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடக்கிறது. இந்த முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ' உங்களுடன் ஸ்டாலின் 'திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் தாசில்தார், ஆர் ஐ, வி.ஏ.ஓ., கையெழுத்துடன் வைகை ஆற்றில் மூட்டையாக கட்டி வீசப்பட்டு இருந்தது.
பட்டா மாறுதல், பெயர் மாற்றம், ஸ்மார்ட் கார்டு வேண்டி வழங்கப்பட்ட மனுக்கள் ஆகியவை அதில் உள்ளன. திருப்புவனம், பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரையில் ஆகஸ்ட் 21, 22ம் தேதிகளில் பெறப்பட்ட மனுக்கள் என தகவல் வெளியாகி உள்ளது. தகவல் அறிந்து விரைந்த சென்ற அதிகாரிகள் ஆற்றுப்பாலத்தின் கீழ் தண்ணீரில் கிடந்த மனுக்களை கைப்பற்றி கொண்டு சென்றனர்.
மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை வைகை ஆற்றில் கொட்டிச் சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளத்தில் பேசும் பொருளாகி உள்ளது. 'இதற்கு தான் மக்கள் கூட்டம் கூட்டமாக கூடி, வரிசையில் காத்திருந்து மனுக்களை அளிக்கின்றனரா' என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மனுக்களை ஆற்றில் வீசிய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நெட்டிசன்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.