/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தை நகர்வை தீர்மானிக்கலாம்
/
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தை நகர்வை தீர்மானிக்கலாம்
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தை நகர்வை தீர்மானிக்கலாம்
நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் சந்தை நகர்வை தீர்மானிக்கலாம்
ADDED : அக் 13, 2024 02:55 AM

கடந்த வாரம்
• கடந்தவாரம் திங்களன்று 218 புள்ளி இறக்கத்துடன் நிறைவடைந்த நிப்டி, செவ்வாயன்று 217 புள்ளிகள் ஏற்றத்துடனும்; புதனன்று 31 புள்ளிகள் இறக்கத்துடனும்; வியாழனன்று 16 புள்ளிகள் ஏற்றத்துடனும்; வெள்ளியன்று வர்த்தக நாளின் இறுதியில் 34 புள்ளிகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தது. வாரத்தின் இறுதியில் வாராந்திர அடிப்படையில் 50 புள்ளிகள் இறக்கத்துடன் நிப்டி நிறைவடைந்திருந்தது
• வாகன நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை விற்பனைக்கு அனுப்பியது செப்டம்பரில் கிட்டத்தட்ட 10 சதவீதம் வீழ்ச்சி கண்டதாக வாகன முகவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கடந்த திங்களன்று தெரிவித்திருந்தது. அதிகபட்சமாக கார்கள் விற்பனை, 18.8 சதவீதமும் குறைந்தபட்சமாக இருசக்கர வாகனங்கள், 8.5 சதவீதமும் குறைவாக விற்பனைக்கு அனுப்பப்பட்டதாக கூறப்பட்டது
• ஈக்விடி மியூச்சுவல் பண்டுகளில் முந்தைய மாதத்தைவிட செப்டம்பரில் முதலீடு 10 சதவீத அளவுக்கு குறைந்ததாகவும் எஸ்.ஐ.பி., எனப்படும் மாத தவணை முதலீடுகள் இதுவரை இல்லாத அதிகபட்சமாக, செப்டம்பரில் 24,509 கோடி ரூபாயாக உயர்ந்ததாகவும் தகவல் வெளியானது
• அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத சரிவை கடந்த வாரத்தில் சந்தித்தது. வெள்ளிக்கிழமை, கரன்சி வர்த்தகத்தின் இடையே 1 டாலர் 84.07 ரூபாயாக வீழ்ச்சி கண்ட நிலையில், பின்னர் ஒருகாசு மீண்டு 84.06 ரூபாயில் முடிவடைந்தது.
வரும் வாரம்
• ஏற்றுமதி மற்றும் இறக்குமதி நிகர அளவு, எம்3 பணப்புழக்கம், பயணியர் வாகன விற்பனை எண்ணிக்கை, வங்கிகள் வழங்கிய கடனின் அளவு வளர்ச்சி, வங்கிகளில் இருக்கும் வைப்பு நிதியின் அளவில் வளர்ச்சி போன்ற இந்திய பொருளாதாரம் சார்ந்த சில தரவுகள், வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன
• நுகர்வோரின் பணவீக்கம் குறித்த எதிர்பார்ப்பு, சில்லரை வணிக விற்பனை, வேலையில்லாத நபர்களின் எண்ணிக்கை, தொழிற்சாலைகளில் நடந்த உற்பத்தி, கட்டடங்கள் கட்டுவதற்கு தரப்பட்ட அனுமதிகளின் எண்ணிக்கை போன்ற அமெரிக்க பொருளாதாரம் சார்ந்த தரவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன.
கவனிக்க வேண்டியவை
• நுாற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் வரும் வாரத்தில் வெளிவர இருக்கின்றன. இவையும், சந்தையின் போக்கில் பாதிப்பை உருவாக்கும். செய்திகள், நிகழ்வுகள் மற்றும் உலக பங்கு சந்தைகள் சந்திக்கும் ஏற்ற இறக்கங்கள் போன்றவையும் வரும் வாரத்தில் நடக்க இருக்கும் சந்தையின் நகர்வுகளை தீர்மானிக்கும் காரணி களாக இருக்க வாய்ப்புள்ளது
• டெக்னிக்கல் அனாலிசிஸ் அளவீடுகளின்படி பார்த்தால், கடந்த வார இறுதியில் நிப்டியில் இறக்கம் தொடர்வதற்கான சூழல் உருவாகியிருப்பதைப் போன்ற நிலைமை தென்படுகிறது. செய்திகள் மற்றும் நிகழ்வுகள் போன்றவையே, நிப்டியின் வரும் வார நகர்வுகளை தீர்மானம் செய்யும் வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் வர்த்தகர்கள், எச்சரிக்கையுடனும் குறுகிய அளவிலான நஷ்டம் குறைக்கும் ஸ்டாப்லாஸ்களை வைத்துக் கொண்டும், குறைந்த அளவிலான எண்ணிக்கையிலும் மட்டுமே வர்த்தகம் செய்வது குறித்து சிந்திக்கலாம்.
நிப்டியின் டெக்னிக்கல் அனாலிசிஸ் சார்ந்த தற்போதைய நிலவரம்:
நிப்டி 24,694, 24,425 மற்றும் 24,218 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான ஆதரவையும், 25,234, 25,504 மற்றும் 25,710 என்ற நிலைகளில் வாராந்திர ரீதியிலான தடைகளையும் டெக்னிக்கல் அனாலிசிஸ் அடிப்படையில் சந்திப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.
நிப்டியில் ஏற்றம் தொடர்வதற்கு தற்சமயம் உருவாகியுள்ள முக்கிய டெக்னிக்கல் திருப்புமுனை அளவான 24,964 என்ற அளவிற்கு கீழ் இறங்காமல், தொடர்ந்து வர்த்தகமாகிக் கொண்டு இருப்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.