UPDATED : ஜூலை 22, 2025 12:35 PM
ADDED : ஜூலை 21, 2025 10:26 PM

திருப்பூர் :நம் நாட்டில் இருந்து ஆடை ஏற்றுமதி அதிகம் நடைபெறும் 'டாப் - 10' நாடுகள் வரிசையில், 10வது நாடாக ஜப்பான் இணைந்துள்ளது; ஆஸ்திரேலியாவுக்கான ஏற்றுமதி மந்தமாகியுள்ளது.
இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், 2024 - 25ம் ஆண்டில், 1.35 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்தது; 'டாப்-10' நாடுகளுக்கு மட்டும், 1.02 லட்சம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி நடந்துள்ளது.
நடப்பு நிதியாண்டு துவக்கத்தில் இருந்தே, ஆஸ்திரேலியாவுக்கான இந்திய ஏற்றுமதி மந்தமாகியுள்ளது. அதேநேரத்தில், ஜப்பானுக்கான ஆடை ஏற்றுமதி அதிகரித்துஉள்ளது.
இதனால், 'டாப் -10' நாடுகள் பட்டியலில், 10வது நாடாக, ஜப்பான் முன்னேறியுள்ளது.
கடந்த நிதியாண்டில், ஆஸ்திரேலியாவுக்கான ஒட்டுமொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி, 2,975 கோடி ரூபாயாக இருந்தது; ஜப்பானுக்கு, 1,742 கோடியாக இருந்தது.
நடப்பு நிதியாண்டின் முதல் மூன்று மாதங்களில், ஜப்பான் ஏற்றுமதி மட்டும், முந்தைய ஆண்டுகளை காட்டிலும், 21.60 சதவீதம் அதிகரித்துஉள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு ஏற்றுமதி, 4.50 சதவீதம் சரிந்துள்ளதாக, ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின் றன.