/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
இதுவரை இல்லாத சரிவில் ரூபாய் மதிப்பு
/
இதுவரை இல்லாத சரிவில் ரூபாய் மதிப்பு
ADDED : டிச 04, 2025 01:25 AM

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, நேற்று 90.29 என்ற வரலாறு காணாத சரிவை தொட்டது. வர்த்தக முடிவில் 90.15 ஆக நிலைபெற்றது.
இந்தியா -- அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் முடிவடையாமல் இழுபறியாக இருப்பதும், அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையிலிருந்து வெளியேறுவதும், ரூபாயின் மதிப்பை தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகிறது.
கடந்த சில வாரங்களாக, ரூபாய் மதிப்பை 88.80 என்ற அளவில் ரிசர்வ் வங்கி பாதுகாத்து வந்தது. ஆனால், நவம்பர் 21 முதல் அந்த பாதுகாப்பை விலக்கியது. தற்போது, திடீர் மற்றும் பெரிய ஏற்ற இறக்கங்களை தடுக்க மட்டுமே ரிசர்வ் வங்கி தலையிடுகிறது.
தற்போது ரூபாய் மதிப்பு 90ஐ தாண்டியுள்ள நிலையில், இந்த புதிய நிலையை ரிசர்வ் வங்கி உறுதியாக பாதுகாக்குமா அல்லது படிப்படியான வீழ்ச்சிக்கு அனுமதிக்குமா என்பது இனிவரும் நாட்களில் தெரியவரும்.
அமெரிக்க பெடரல் வங்கியின் அடுத்த தலைவராக கெவின் ஹஸெட் நியமிக்கப்படலாம் என, அந்நாட்டு அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளதால், டாலர் மதிப்பு பலவீனமடைந்தது. ஹஸெட் வட்டி விகிதத்தை குறைவாக வைத்திருக்க விரும்புபவர் என நம்பப்படுகிறது.
அமெரிக்க டாலர் பலவீனமடையும்போது, இந்தியா போன்ற வளர்ந்து வரும் சந்தை நாணயங்கள் சற்று நிம்மதி பெருமூச்சு விட முடியும். ரூபாயின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இரண்டு முக்கிய நிகழ்வுகள், டிசம்பர் மாதத்தில் நடைபெற உள்ளன. ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கையில் மாற்றம் இல்லாவிட்டால், சந்தை பெரிதாக அசையாது.
ஆனால், வட்டி விகித குறைப்புக்கான எந்தவொரு அறிகுறியும் ரூபாய் மதிப்பில் மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தலாம். அடுத்து, அமெரிக்க பெடரல் வங்கி, கடன் வட்டி விகித குறைப்புக்கான வாய்ப்பு 89 சதவீதமாக இருப்பதாக சந்தை எதிர்பார்க்கிறது.
இது நடந்தால், அமெரிக்க டாலர் பலவீனமடைந்து, ரூபாய் மதிப்பு சரிவிலிருந்து சற்று மீள வாய்ப்பு கிடைக்கும்.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 89.00-90.50 என்ற வரம்பிற்குள் வர்த்தகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 89.00க்கு கீழ் நிலையாக உயர்ந்தால் மட்டுமே, ரூபாய் வலுப்பெற தொடங்கியதற்கான முதல் அறிகுறியாக இருக்கும்.

