ADDED : ஜூன் 08, 2026 06:00 AM

உள்நாட்டு உற்பத்தியாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த, அதே நேரம் சூரிய மின் உற்பத்தியாளர்கள் அஞ்சி நடுங்கிய அறிவிப்பு, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகத்திடம் இருந்து ஒரு வழியாக வந்தேவிட்டது.
'நடப்பு ஜூன் 1 முதல், நம் நாட்டில் அரசின் ஆதரவுடன் செயல்படுத்தப்படும் அனைத்து புதிய சூரிய மின் திட்டங்களிலும், உள்நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட உற்பத்தியாளர்களால் தயாரிக்கப்பட்ட சோலார் செல்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என்ற திட்டவட்டமான அறிவிப்பு தான் அது.
மேலோட்டமாக பார்த்தால், இது ஏதோ ஒரு சாதாரண ஒழுங்குமுறை நடவடிக்கை போல் தோன்றலாம்.
ஆனால், உண்மையில் இது 2021ல் அறிமுகப்படுத்தப்பட்ட, பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்திசார் ஊக்குவிப்பு திட்டத்திற்கு பின், இந்தியா எடுத்துஉள்ள மிக முக்கியமான, தீர்க்கமான ஒரு முடிவாகும்.
ஏன் என்று பார்ப்போம்.
மேற்காசியாவில் மீண்டும் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழல், எரிசக்தி துறையில் நாம் சுயமாக செயல்பட வேண்டியதன் அவசியத்தை பட்டவர்த்தனமாக உணர்த்தியுள்ளது.
நம் ஒட்டுமொத்த பயன்பாட்டில் 88 சதவீதம் வெளிநாடுகளில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது; அதிலும் பெரும்பகுதி பதற்றம் நிறைந்த ஹார்முஸ் ஜலசந்தி வழியாகவே வருகிறது. அங்கு பிரச்னை என்றால், நம் கதி அதோ கதி என்ற நிலையில் உள்ளோம்.
இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள நமக்கு மிகச்சிறந்த மாற்று, சூரிய சக்தி மட்டுமே. காரணம், சூரிய ஒளி என்பது நமக்கு தாராளமாக கிடைக்கும் ஒரு வளம்; அதை நாம் எந்தவொரு சர்ச்சைக்குரிய பகுதி வழியாகவும் கொண்டு வர தேவையில்லை.
அதை மனதில் கொண்டு தான், உள்நாட்டு சூரிய சக்தி உற்பத்தி தளத்தை உருவாக்க 24,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பி.எல்.ஐ., திட்டம், ஐந்து ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாகத்தான், தற்போது கட்டாய உள்நாட்டு சோலார் செல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அரசின் இந்த முடிவு சரியானது தான் என்றாலும், பி.எல்.ஐ., திட்டம் தீர்க்க நினைத்த ஒட்டுமொத்த பிரச்னையில் இது பாதியை மட்டுமே சரி செய்கிறது.
இந்த கட்டாய விதிமுறை, மானிய திட்டங்களால் உருவாக்கப்பட்ட ஒரு தொழில் துறையின் பொருளாதார உற்பத்தியை நஷ்டமடையாமல் பாதுகாக்குமே தவிர, சூரிய சக்தி துறையின் அடிப்படை இலக்கான தொழில்நுட்ப சுயசார்பை உருவாக்காது.
எதிரெதிர் திசைகள் உள்நாட்டு உற்பத்தி, எரிசக்தி சுயசார்பு ஆகிய இரண்டும் வெவ்வேறு திசையில் பயணிக்கும் இரு வேறு இலக்குகள். தற்போதைய கொள்கை வடிவமைப்பு முதலாவது இலக்குக்கு குறி வைக்கிறதே தவிர, இரண்டாவது இலக்கை நோக்கி திரும்பக் கூட இல்லை.
அது ஏன் என்பதை புரிந்து கொள்ள, சோலார் பேனலுக்குள் உண்மையில் என்ன இருக்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்வது அவசியம்.
அதில் உள்ள பாகங்களின் உற்பத்தியில் நாம் எவ்வளவு துாரம் ஆரம்ப கட்டத்தை நோக்கி செல்கிறோமோ, அந்தளவிற்கு செயல்முறை மிகவும் கடினமானதாகவும், அதிக முதலீடு மற்றும் தொழில்நுட்ப அறிவு தேவைப்படுவதாகவும் மாறும்.
ஒரு ஜிகா வாட்டுக்கான சோலார் மாடுல்களை அசெம்பிள் செய்வதற்கான ஆலையை 18 மாதங்களில், 170 கோடி ரூபாய் முதலீட்டில் உருவாக்க முடியும்.
ஆனால், சோலார் செல்களை தயாரிக்க, முற்றிலும் துாசியற்ற மிகத்துாய்மையான அறைகள், துல்லியமான போட்டோலித்தோகிராபி மற்றும் செல்லின் செயல்திறனை அதிகரிக்கும் பல அடுக்கு செயல்முறைகள் தேவைப்படுகின்றன.
இதற்கு, ஒரு ஜிகா வாட்டுக்கு 650 கோடி ரூபாயும், இரண்டு ஆண்டு காலமும் தேவைப்படும். அதேபோல், வேபர் தயாரிப்பது என்பது அணு அளவிலான உலோகவியல் தொழில்நுட்பமாகும். பாலிசிலிகான் தயாரிப்பு என்பதும் மிக சிக்கலான வேதியியல் செயல்முறையாகும்.
முந்தியது சீனா சீனா இதை 30 ஆண்டுகளுக்கு முன்னரே புரிந்து கொண்டு, ஆரம்பகட்ட உற்பத்தியிலிருந்தே தன் ஆதிக்கத்தை நிலைநாட்டியது.
ஆனால், இந்தியாவின் பி.எல்.ஐ., திட்டம் மாடுல்களிலிருந்து செல்களுக்கும், செல்களிலிருந்து வேபர் மற்றும் பாலிசிலிகானுக்கும் பின்னோக்கி செல்லும் ஒரு முயற்சியாகும். இங்கு தான் தற்போதைய உள்நாட்டு செல் கட்டாய விதிமுறை முக்கியத்துவம் பெறுகிறது.
ஒரு சோலார் செல் என்பது ஏதோ மாடுலின் சிறிய வடிவம் அல்ல; அது முற்றிலும் மாறுபட்ட ஒரு பொருள். அதை தயாரிக்க வேபரை எடுத்து, அதிக ஒளியை ஈர்க்கும் வண்ணம் அதன் மேற்பரப்பை செதுக்க வேண்டும்.
மின்சாரத்தை மாற்றும் திறனுக்காக பாஸ்பரஸ் கொண்டு ஊட்டம் செய்து, மிக அதிக வெப்பம் மற்றும் வெற்றிடச் சூழலில் இயங்கும் இயந்திரங்களை பயன்படுத்தி பல அடுக்கு அமைப்புகளை உருவாக்க வேண்டும்.
இறுதியாக மைக்ரான் அளவிலான துல்லியத்துடன் வெள்ளியால் செய்யப்பட்ட மின்முனைகளை அதன் மேல் அமைக்க வேண்டும்.
இந்த ஒவ்வொரு படிநிலைக்கும், உலகிலேயே மிகச்சில நிறுவனங்கள் மட்டுமே தயாரிக்கும் அதிநவீன உபகரணங்கள் தேவைப்படுகின்றன. துரதிர்ஷ்டவசமாக அந்நிறுவனங்களில் பெரும்பாலானவை சீன நிறுவனங்களாகும்.
குறிப்பாக, ரிலையன்ஸ் நிறுவனம் தன் ஜாம் நகர் ஆலைக்காக வாங்கிய ஹெட்டிரோஜங்ஷன் செல் தயாரிப்பு கருவிகளுக்கான துறையில், சீனாவின் 'சுஷூ மேக்ஸ்வெல் டெக்னாலஜிஸ்' நிறுவனமே ஆதிக்கம் செலுத்துகிறது.
இந்தியாவின் 10 முன்னணி சோலார் நிறுவனங்கள் இறக்குமதி செய்த சோலார் உற்பத்தி உபகரணங்களில் பாதியோ அல்லது அதற்கும் மேலோ சீன நிறுவனங்களிடம் இருந்தே வாங்கப்பட்டு உள்ளதாக தரவுகள் கூறுகின்றன.
சில உபகரணங்கள் ஐரோப்பாவில் இருந்து இருக்குமதி செய்யப்பட்டாலும், அந்த ஐரோப்பிய நிறுவனங்களும் சீன மற்றும் கொரிய தொழில்நுட்ப நிபுணத்துவத்தையே நம்பியிருக்கின்றன.
சுயசார்பு வழிமுறைகள் சூரிய மின் உற்பத்தியில் நம் நாடு உண்மையிலேயே சுயசார்பை அடைய வேண்டுமென்றால், இது போன்ற கட்டாய உள்நாட்டு சோலார் செல் விதிமுறைகளை விட, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட சொந்த அறிவுசார் சொத்துரிமை கொண்ட தொழில்நுட்பங்களை கொண்டு தயாரிக்கப்படும் சோலார் செல்களே பயன்படுத்தப்பட வேண்டும் என்பது போன்ற உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
தென் கொரியா மற்றும் தைவான் போன்ற நாடுகள் தங்களின் 'செமிகண்டக்டர்' துறையை வளர்க்க, இத்தகைய உத்திகளையே கையாண்டன.
சூரிய மின் திட்டங்களை நிறுவுவதற்கு செலவிடும் தொகையில் ஒரு சிறு பகுதியை, அதன் அடிப்படை தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்காக ஒதுக்க வேண்டும்.
தற்போதைய சோலார் தொழில்நுட்பங்களில் ஏற்கனவே சீனா தன் ஆதிக்கத்தை நிலைநாட்டிஉள்ளது.
எனவே, இந்தியா தற்போதைய தொழில்நுட்பங்களை நகலெடுப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல், அடுத்த தலைமுறை தொழில்நுட்பங்களை குறிவைக்க வேண்டும்.
அப்போது தான், சூரிய மின் உற்பத்தியில் நம் நாடு முழு சுயசார்பை அடைய முடியும்.
