/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
ஒரகடம் மருத்துவ சாதன பூங்காவில் ரூ.153 கோடியில் சிறப்பு உள்கட்டமைப்பு
/
ஒரகடம் மருத்துவ சாதன பூங்காவில் ரூ.153 கோடியில் சிறப்பு உள்கட்டமைப்பு
ஒரகடம் மருத்துவ சாதன பூங்காவில் ரூ.153 கோடியில் சிறப்பு உள்கட்டமைப்பு
ஒரகடம் மருத்துவ சாதன பூங்காவில் ரூ.153 கோடியில் சிறப்பு உள்கட்டமைப்பு
ADDED : மார் 08, 2024 01:45 AM

சென்னை:காஞ்சிபுரம், ஒரகடத்தில் 'சிப்காட்' நிறுவனம், மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்காக தனி தொழில் பூங்காவை அமைத்துள்ளது.
அங்கு, தொழில் துவக்கும் நிறுவனங்கள் பயன் பெற, 153 கோடி ரூபாய் செலவில், இ.எம்.ஐ., - இ.எம்.சி., மையம், 'காமா இரிடியேஷன்' மையம் உள்ளிட்ட சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
தமிழக அரசு, மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களுக்காக தனி தொழில் பூங்காவை, காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் அமைத்துள்ளது. மொத்த ஏக்கர் 350; திட்டச் செலவு 400 கோடி ரூபாய்.
பரிசோதனை
முதல் கட்டமாக, 150 ஏக்கரில் மருத்துவ சாதன பூங்கா அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது. அங்கு சாலை, தண்ணீர் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இதுவரை, 17 நிறுவனங்களுக்கு 28.84 ஏக்கர் விற்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர், 1.30 கோடி ரூபாய்.
இங்கிருக்கும் நிறுவனங்கள், அறுவை சிகிச்சை இயந்திரங்கள், 'எக்ஸ்ரே' கருவிகள், மூட்டு மாற்று சிகிச்சை கருவிகள், 'வெண்டிலேட்டர்' உதிரிபாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன.
தமிழகத்தில் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் தரத்தை பரிசோதிக்க, ஆந்திரா உட்பட பிற மாநிலங்களுக்கும்; வெளிநாடுகளுக்கும் தங்கள் தயாரிப்பை அனுப்புகின்றன.
எனவே, ஒரகடம் மருத்துவ சாதனங்கள் தயாரிக்கும் பூங்காவில் தொழில் துவக்கும் நிறுவனங்கள், அங்கேயே தங்களின் தயாரிப்புகளை பரிசோதிக்கவும், பாதுகாப்பாக வைக்கவும், 153 கோடி ரூபாய் செலவில், சிறப்பு உள்கட்டமைப்பு வசதிகளை சிப்காட் ஏற்படுத்தி வருகிறது.
மேலும், உற்பத்தி செய்த சாதனங்களை பாதுகாப்பாக வைக்க, குளிர்பதன மற்றும் சேமிப்பு கிடங்குகளும் கட்டப்பட்டு வருகின்றன. இவை விரைவில் முடிவடைய உள்ளன.
ஆராய்ச்சி
இது குறித்து, சிப்காட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் கே.செந்தில்ராஜ் கூறியதாவது:
இந்தியாவில் மோட்டார் வாகனம், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் தயாரிப்பு துறைகளுக்கு, சென்னை தலைநகராக திகழ்கிறது.
அதேபோல், மருத்துவ சாதனங்கள் தயாரிப்பிலும் சென்னையை முக்கிய மையமாக மாற்ற, ஒரகடத்தில் தனி தொழில் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
அந்த பூங்காவில் தொழில் துவக்கும் நிறுவனங்கள், அங்கேயே தங்களின் ஆய்வு உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், ஒருங்கிணைந்த சோதனை ஆய்வகம், திறன் மேம்பாட்டு மையம், குளிர்பதன மற்றும் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
இதனால், புதிய தொழில்நுட்பம், புதுவித ஆராய்ச்சிகளில் ஈடுபட உதவியாக இருக்கும். எனவே, தொழில் நிறுவனங்கள், மருத்துவ சாதன பூங்காவில் தொழில் துவங்கி பயன் பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஒருங்கிணைந்த சோதனை ஆய்வகம், திறன் மேம்பாட்டு மையம், குளிர்பதன மற்றும் கிடங்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

