
அமெரிக்க முதலீட்டாளர்களும் வர்த்தகர்களும், அந்நாட்டின் வட்டி விகிதம் தொடர்பான முடிவுக்காக காத்திருக்கின்றனர். அந்நாட்டின் பணக்கொள்கை குழு சந்திப்பு நடந்துகொண்டு இருக்கிறது. அதன் முடிவு பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டது தான். வட்டி விகிதம் இனிமேல் உயர்த்தப்படாது. அதேபோல், அது உடனடியாக குறைக்கவும் படாது
ஆனால், எந்தத் திசையில் வட்டி விகிதம் தொடர்பான முடிவுகள் நகரும் என்பதை தெரிந்து கொள்ளத் தான் எல்லா முதலீட்டாளர்களும் ஜெரோம் பவுல் வாயில் இருந்து விழும் முத்துகளுக்காக காத்திருக்கின்றனர். அதனால் காலையில் சரிவுடன் துவங்கிய நம் பங்குச் சந்தைகள், பின்னர் படிப்படியாக பலம் பெற்று, மாலையில் லாபத்துடன் நிறைவடைந்தன.
இன்று தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட் மீது மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட வாய்ப்பில்லை என்றாலும், இரண்டு தரவுகளின் மீது வர்த்தகர்கள் கவனம் செலுத்துகின்றனர். ஒன்று, நிதிப் பற்றாக்குறை மதிப்பீடு, மற்றொன்று வரி வசூல் செய்யப்பட்ட அளவு. அதேபோல், வருமான வரி விகிதத்தில் சிற்சில மாற்றங்கள் இருக்கலாம் என்பதும் இன்னொரு எதிர்பார்ப்பு. இதனால், நிதி அமைச்சருக்கு முகமன் கூறும் விதமாக, சந்தைகள் பச்சையில் ஒளிர்ந்தன
ஜவுளி, உணவுப் பதப்படுத்தல், மருந்துகள் துறைகளுக்கும் பி.எல்.ஐ., எனப்படும் உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டத்தை மத்திய அரசு விரிவுசெய்யக்கூடும் என்று ஒரு தனியார் அறிக்கை சொன்னது
பிரதமர் நரேந்திர மோடியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில், இந்தியா, உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக உயர்ந்து நிற்கும் என்று, மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்ததை வர்த்தகர்கள் உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டனர்
பொட்டாசியம் மற்றும் பொட்டாசிக் உரங்களை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்கள், அதன் விலையில் 12 சதவீதம் வரை லாபம் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்படுவதாக, மத்திய ரசாயன, உரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்து உள்ளது
வர்த்தக நேர முடிவில், வாகனங்கள், வங்கிகள், சுகாதாரம், மின்சாரம், உலோகம், மனை வணிகம் ஆகிய துறை சார்ந்த பங்குகள் நல்ல லாபத்தை ஈட்டின. மூலதனப் பொருட்கள் சார்ந்த பங்குகள் மட்டும் பெரிதாக வளரவில்லை.