
மீண்டும் சரிந்த சந்தைகள்
இந்த வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் நிறைவு செய்தன. அமெரிக்க அதிபர் டிரம்ப், சீன இறக்குமதி பொருட்களுக்கு 104 சதவீதமாக வரியை உயர்த்தியது, தொடர்ச்சியாக அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் ஆகியவை காரணமாக, இந்திய சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போதே, சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின.
ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டியை 0.25 சதவீதம் குறைத்தது, சந்தைக்கு சாதகமாக இருந்த போதும், அமெரிக்காவின் வரி விதிப்பால் நிலவும் வர்த்தக பதற்றம் காரணமாக, முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை விற்று வெளியேறினர்.
இதனால், நேற்றைய வர்த்தக நேரத்தின் போது, சந்தையில் ஊசலாட்டம் நீடித்தது. அமெரிக்காவில் இறக்குமதியாகும் இந்திய மருந்து பொருட்களுக்கு விரைவில் வரி விதிக்கப் போவதாக டிரம்ப் அறிவித்ததை தொடர்ந்து, இந்திய மருந்து நிறுவனங்களின் பங்குகள் 6 சதவீதத்துக்கு மேல் சரிவை கண்டன. வர்த்தக நேர முடிவில் நிப்டி, சென்செக்ஸ் தலா 0.50 சதவீதம் இறக்கத்துடன் நிறைவடைந்தன.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 4,358 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலைநேற்று 1 பேரலுக்கு 4.23 சதவீதம் குறைந்து, 60.16 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 42 பைசா குறைந்து, 86.68 ரூபாயாக இருந்தது.