
வரி நிறுத்தி வைப்பால் நிம்மதி
வாரத்தின் கடைசி வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் நல்ல ஏற்றத்துடன் நிறைவு செய்தன. அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் நீடிப்பதால், உலகளாவிய சந்தை போக்குகள் கலவையாக இருந்த போதும், நேற்று இந்திய சந்தையில் வர்த்தகம் ஆரம்பித்த போதே, சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா தவிர்த்து பிற நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு விதித்த பரஸ்பர வரியை 90 நாட்கள் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதையடுத்து, நிம்மதியடைந்த முதலீட்டாளர்கள், அனைத்து துறை பங்குகளை வாங்க ஆர்வம் காட்டினர். குறிப்பாக, இந்தியாவுக்கு விதித்த 26 சதவீத வரியை நிறுத்தி வைப்பதாகவும் டிரம்ப் அறிவித்ததால், சந்தையில் உற்சாகம் ஏற்பட்டது.அதிகபட்சமாக, உலோகத்துறை சார்ந்த நிறுவனங்களின் பங்குகள் 4 சதவீதத்துக்கு மேல் உயர்வு கண்டன.
வர்த்தக நேர முடிவில் நிப்டி, சென்செக்ஸ் தலா 2 சதவீதம் உயர்ந்தன. வார அடிப்படையில், இரண்டாவது வாரமாக சந்தை குறியீடுகள் சரிவுடன் நிறைவு செய்தன. அமெரிக்கா, சீனா மாறி, மாறி வரிவிதிப்பை அதிகரித்துக் கொண்டே வர்த்தகப் போரை தொடர்வதால், உலக சந்தைகள் நேற்று சரிவுடன் வர்த்தகமானது குறிப்பிடத்தக்கது.அம்பேத்கர் ஜெயந்தியை ஒட்டி, வரும்
திங்களன்று இந்திய பங்குச்சந்தைக்கு விடுமுறை.
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 2,519 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.32 சதவீதம் உயர்ந்து, 63.53 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 61 பைசா அதிகரித்து, 86.07 ரூபாயாக இருந்தது.

