
குறையும் முதலீட்டாளர்கள் நம்பிக்கை
நேற்று இந்திய பங்கு சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் ஆகியவை சரிவை கண்டன. அமெரிக்காவில் முன்மொழியப்பட்டுள்ள பட்ஜெட் பரிந்துரையால், கடன் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இந்த தகவலால் உலகளாவிய சந்தைகள் சரிவுடன் வர்த்தகமாகின. இதனால், இந்திய சந்தை குறியீடுகள் இறக்கத்துடன் துவங்கின.
மேலும், இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தில் இழுபறி நீடிப்பதால், நம்பிக்கை இழந்த முதலீட்டாளர்கள், -ஐ.டி., நுகர்பொருட்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு துறை சார்ந்த முன்னணி நிறுவனங்களின் பங்குகளை விற்று லாபத்தை பதிவு செய்தனர். இதனால், வர்த்தகத்தின் இடையே சென்செக்ஸ் 1,106 புள்ளிகள் வரை சரிந்து, பின்னர், 644 புள்ளிகள் சரிவுடன் முடிந்தது. நிப்டி, சென்செக்ஸ் தலா 1 சதவீதம் சரிந்தன.
உலக சந்தைகள்
புதனன்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. இதன் தொடர்ச்சியாக ஜப்பானின் நிக்கி, தென் கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹாங்சேங், சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் சரிவுடன் நிறைவு செய்தன. ஐரோப்பிய சந்தைகளும் சரிவுடன் நிறைவடைந்தன.
சரிவுக்கு காரணங்கள்
1 உலகளாவிய சந்தைகளில் காணப்பட்ட பாதகமான போக்கு
2 இந்தியா - அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் தாமதம்
3 முன்னணி நிறுவன பங்குகளை விற்று லாபம் ஈட்டிய முதலீட்டாளர்கள்.
சரிவு கண்ட பங்குகள் -- நிப்டி
ஓ.என்.ஜி.சி., 2.65%
மஹிந்திரா & மஹிந்திரா 2.42%
ஹிண்டால்கோ 2.03%
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 5,045 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று விற்று இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.37 சதவீதம் குறைந்து, 64.02 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 36 பைசா சரிந்து, 85.95 ரூபாயாக
இருந்தது.