
பரஸ்பர வரிக்கு தடையால் உற்சாகம்
இந்திய பங்குச் சந்தை குறியீடுகளான நிப்டி, சென்செக்ஸ் நேற்று உயர்வுடன் நிறைவு செய்தன. மீண்டும் அன்னிய முதலீடுகள் அதிகரித்தது, அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரிவிதிப்புக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்தது உள்ளிட்டவை காரணமாக, நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே ஏற்றுமதி சார்ந்த ஐ.டி., மருந்து தயாரிப்பு நிறுவன பங்குகள் உயர்வு கண்டன.
இதனால், இரண்டு நாட்கள் நிப்டி, சென்செக்ஸ் கண்ட சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. எனினும், கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு, அமெரிக்க பத்திரங்களின் வட்டி உயர்வு ஆகியவை காரணமாக சந்தையில் ஊசலாட்டம் நீடித்தது. கடைசி ஒரு மணி நேரத்தில், முதலீட்டாளர்கள் பங்குகளை மளமளவென வாங்கவே, சந்தை மீண்டும் உயர்வு பாதைக்கு திரும்பியது. நேற்றைய வர்த்தகத்தின் இடையே, சென்செக்ஸ் 504.57 புள்ளிகள் வரை உயர்வு கண்டது. பின்னர், சற்று குறைந்து 320.70 புள்ளிகள் உயர்வுடன் முடிவடைந்தது.
உலக சந்தைகள்
புதனன்று அமெரிக்க சந்தைகள் சரிவுடன் நிறைவடைந்தன. ஆசிய சந்தைகளைப் பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, தென்கொரியாவின் கோஸ்பி, ஹாங்காங்கின் ஹாங்சேங், சீனாவின் ஷாங்காய்எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடன் நிறைவு செய்தன. ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின.
உயர்வுக்கு காரணங்கள்
1 டிரம்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு அமெரிக்க நீதிமன்றம் தடை
2 அன்னிய முதலீடுகள் மீண்டும் அதிகரிக்க துவங்கியது
3 ஐ.டி., மருந்து தயாரிப்பு நிறுவன பங்குகளை வாங்க ஆர்வம்
உயர்வு கண்ட பங்குகள்
இண்டஸ்இண்ட் பேங்க் 2.47%
சன் பார்மா 1.99%
எட்டர்னல் 1.79%
அன்னிய முதலீடு
அன்னிய முதலீட்டாளர்கள் 884 கோடி ரூபாய்க்கு பங்குகளை நேற்று வாங்கி இருந்தனர்.
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.42 சதவீதம் அதிகரித்து, 65.82 அமெரிக்க டாலராக இருந்தது.
ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 10 பைசா குறைந்து, 85.48 ரூபாயாக இருந்தது.