/
செய்திகள்
/
வர்த்தகம்
/
பங்கு வர்த்தகம்
/
திருப்போரூரில் உப்பு உற்பத்தி ஆயத்த பணியில் தமிழக அரசு
/
திருப்போரூரில் உப்பு உற்பத்தி ஆயத்த பணியில் தமிழக அரசு
திருப்போரூரில் உப்பு உற்பத்தி ஆயத்த பணியில் தமிழக அரசு
திருப்போரூரில் உப்பு உற்பத்தி ஆயத்த பணியில் தமிழக அரசு
ADDED : மார் 08, 2024 01:37 AM
சென்னை:தமிழக அரசின் உப்பு நிறுவனம், செங்கல்பட்டு, திருப்போரூரில் உப்பு உற்பத்தி செய்வதற்கான ஆயத்த பணிகளை துவக்கியது. அடுத்த மாதம், உப்பு உற்பத்தி துவக்கப்பட உள்ளது.
தமிழக அரசின் உப்பு நிறுவனத்திற்கு, ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி தாலுகாவில், வாலிநோக்கம் மற்றும் அதை சுற்றிய கிராமங்களில், 5,236 ஏக்கர் உப்பளம் உள்ளது. இங்கு ஆண்டுக்கு, 1.30 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
அரசு நிறுவனம், ரேஷன் கடைகளில், 'அரசு' என்ற பிராண்டிலும்; வெளிச்சந்தையில், 'நெய்தல்' என்ற பிராண்டிலும் உப்பு விற்கிறது. இதுதவிர, தொழிற்சாலைக்கான உப்பும் தயாரிக்கிறது.
தமிழக அரசு, செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில், தமிழக உப்பு நிறுவனத்திற்கு, 3,010 ஏக்கரை, 2019ல் வழங்கியுள்ளது. அங்கு முதல் கட்டமாக, 500 ஏக்கரில் உப்பு உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டது.
ஆனால், கொரோனா, மழை வெள்ளம் மிக்ஜாம் புயல் என பாதிப்புகளால் முழுவீச்சில் உற்பத்தி செய்ய முடியவில்லை.
இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடல் நீரில், 3 டிகிரி உப்பு தன்மை இருந்தால் மட்டும், உப்பு உற்பத்தி செய்ய முடியும்; தற்போது, கடல் நீரை, திருப்போரூரில் உப்பு உற்பத்தி செய்யும் இடத்திற்கு எடுத்து வந்த போது, அங்கு மண்ணில் உறைந்துள்ள மழை நீர் சேர்ந்திருப்பதால், 1 டிகிரி தான் உப்பு தன்மை உள்ளது.
இது, அடுத்த மாதம் மாறும். எனவே தற்போது, திருப்போரூரில் உப்பு உற்பத்திக்கான ஆயத்த பணிகள் துவங்கியுள்ள நிலையில், அடுத்த மாதம், உப்பு உற்பத்தி செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

