
'பாவ' வரியை பரிசீலிக்க அமைச்சர்கள் குழு
புதுடில்லி:ஜி.எஸ்.டி., அறிமுகத்தின்போது, மாநில அரசுகளுக்கு ஏற்படும் நிதி இழப்பை ஈடுகட்டுவதற்காக விதிக்கப்பட்ட இழப்பீட்டு கூடுதல் வரி குறித்து ஆராய, அமைச்சர்கள் குழுவை ஜி.எஸ்.டி., கவுன்சில் அமைத்துள்ளது. 28 சதவீத வரிக்கும் கூடுதலாக, சொகுசு வரியாக இறக்குமதி கார், விலையுயர்ந்த கைக்கடிகாரம், நகை, தனிநபர் படகு, விமானம், நிறுவனங்கள் வாங்கும் ஹெலிகாப்டர் ஆகியவற்றின் மீதும், 'பாவ' வரியாக, புகையிலை பொருட்கள், மது வகைகள், சூதாட்டம் போன்றவற்றின் மீதும், 2022 மார்ச் வரை கூடுதலாக இழப்பீட்டு வரி விதிக்கப்பட்டது. அதை, 2026 மார்ச் வரை மத்திய அரசு நீட்டித்தது. இன்னும் ஒன்றரை ஆண்டு அவகாசமே உள்ள நிலையில், இதற்கு மாற்று வழிகளை ஆராய, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகம் உட்பட 10 மாநில அமைச்சர்களை கொண்ட இந்த குழு, வரும் டிசம்பர் 31ம் தேதிக்கு முன், தன் பரிந்துரை அறிக்கையை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.