
சி.சி.ஐ., குழுமம் மேலும் ரூ.640 கோடி முதலீடு
சரக்கு வினியோக தொடர் சேவைகளை வழங்கி வரும் சி.சி.ஐ., குழுமம், போளிவாக்கத்தில் வினியோக தொடர் பூங்கா அமைப்பதற்காக, கூடுதலாக 640 கோடி ரூபாயை முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் போளிவாக்கத்தில் கிட்டத்தட்ட 20 லட்சம் சதுர அடி பரப்பளவில், உலக தரத்திலான வினியோக கட்டமைப்பை உருவாக்க, முதல்கட்டமாக 250 கோடி ரூபாயை ஏற்கனவே இந்நிறுவனம் முதலீடு செய்திருந்தது. இந்நிலையில், தற்போதைய முதலீட்டையும் சேர்த்து,போளிவாக்கம் பூங்காவுக்கு 890 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது.
இது குறித்து சி.சி.ஐ., குழுமம் வெளியிட்ட அறிக்கையில், “தென் இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் மையமாக உருவெடுத்து வரும் சென்னையில் அமையும் இந்த நவீன பூங்கா, தொழிற்சாலைகள், இகாமர்ஸ், ஆட்டோமொபைல், நுகர்பொருட்கள் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு சேவைகளை வழங்கும்” என தெரிவித்துள்ளது.